புதிய பெயர் சேர்க்க 19,000 மனுக்களில் 17,000 ஏற்பு மறுஆய்வு செய்து போலிகளை நீக்க கோரிக்கை மேலூர் பகுதியில் அதிகாரிகள் ஆசியுடன் தொடரும் மணல் கடத்தல்

மேலூர், பிப். 13: மேலூர் பகுதியில் அதிகாரிகள், போலீசார் ஆசியுடன் மணல் கடத்தல் தொடர்கதையாக உள்ளது. தும்பைப்பட்டியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 3 லாரிகள், ஒரு ஹிட்டாச்சி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலூர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்து இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வந்தது. இதுகுறித்த புகார்களால் அனைத்த கிரானைட் குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மேலூர் சுற்றுப்பகுதிகளான பள்ளப்பட்டி பாலாறு, கேசம்பட்டி, மேலவளவு, அட்டப்பட்டி, உப்பாறு உள்ளிட்ட இடங்களில் மணலும், பல்வேறு கண்மாய்களில் இருந்து கிராவல் மண் கடத்த துவங்கினர். இவர்களை அவ்வப்போது வருவாய்த்துறையினர், போலீசார் பிடிப்பதும் அபராத தொகையை செலுத்தி விட்டு மறுநாளே அதே வேலையை பார்ப்பதும் வழக்கமாக உள்ளது. காரணம், இவர்களுக்கு ஆளும்கட்சி செல்வாக்கு இருப்பதுதான்.அந்த வகையில் நேற்று தும்பைபட்டியில் உள்ள பட்டாகுளத்தில் ஹிட்டாச்சி எனும் மண் அள்ளும் இயந்திர உதவியுடன் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 லாரிகளையும் பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். ஹிட்டாச்சி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு அங்கேயே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இதுதொடர்பாக லாரி, ஹிட்டாச்சி வாகனத்தின் டிரைவர்கள் கரையிபட்டி ரவிச்சந்திரன் (58), சிங்கம்புணரி பிரபாகரன் (31), பெரியசூரக்குண்டை கதிரேசன் (28), மேலூர் அப்துல்சலாம் (52) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஹிட்டாச்சி உரிமையாளர் தெய்வநாயகம், லாரி உரிமையாளர்கள் பகுர்தீன், இப்ராகிம், வேல்முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பெயரளவில் பறிமுதல் செய்வதும், அதன்பின் உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்தியதும் மறுநாளே விடுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே அபராத தொகையை கடுமையாக உயர்த்த வேண்டும். மேலும் மறுமுறை மணல் திருட்டில் அந்த வாகனத்தை உரிமையாளரிடமிருந்து மொத்தமாக பறிமுதல் செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: