கோயில் கொடை விழாவில் இருதரப்பினர் கடும் மோதல்

நெல்லை, பிப். 13:  நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் அடுத்த தருவை கிராமத்தில் இருபிரிவினருக்கு பாத்தியப்பட்ட இரு அம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் கொடை விழா, நேற்று துவங்கியது. திருமால் பூஜைக்காக ஒரு பிரிவை சேர்ந்தவர்கள், தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீரும், கரகமும் எடுத்து சென்றனர். இந்த ஊர்வலத்தில் இளைஞர்கள் 50 பேர், தங்களது சமுதாய தலைவரின் உருவம் பொறித்த பனியனை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அங்கு வந்த மற்றொரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், ‘எங்களை மட்டும் சமுதாய தலைவர்கள் படம் பொறித்த பனியன் மற்றும் கொடி கலரில் பனியன்களை அணியக் கூடாது’ என்றீர்கள். நாங்கள் அணியவில்லை. அவர்கள் மட்டும் சமுதாய தலைவர் படம் பொறித்த பனியன் அணிந்து வரலாமா? என கேள்வி எழுப்பினர்.

தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி ஏஎஸ்பி ஆஷிஸ்ராவத், இன்ஸ்பெக்டர்கள் (முன்னீர்பள்ளம்) மாரியப்பன், (முக்கூடல்) சங்கரேஸ்வரி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள், மறியலை கைவிட்ட நிலையில், திடீரென இருபிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கல்வீசி தாக்கி கெண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம்போல் ஆனது. சம்பவத்தில் இரு போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்த ஆயத்தமானதையடுத்து இருபிரிவினரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: