அரசு பள்ளி கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்குமா?

புதுக்கடை, பிப்.13 : புதுக்கடை அருகே ரத்து செய்யப்பட்ட அரசு பள்ளி கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் ஆனான்விளையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 109 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. இதற்காக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் வந்து இருந்தனர். இந்த நிலையில் குழித்துறை கல்வி மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் நாயர், திடீரென பள்ளிக்கு வந்து அடிக்கல் நாட்டு விழாவை ரத்து செய்யும்படி கூறினார். மற்றொரு நாளில் விழாவை நடத்தலாம் என உயர் அதிகாரிகள் கூறி உள்ளனர். விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.  ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்தனர். திட்டமிட்டப்படி விழாவை உடனடியாக நடத்த வேண்டும் என்றனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் புதுக்கடை இன்ஸ்பெக்டர் தர், போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இன்று (புதன்) விழா நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இன்று விழா நடைபெற வில்லை என்றால் அதிகாரிகளை எதிர்பார்க்காமல் நாங்களே விழாவை நடத்துவோம் என கூறி சென்றனர்.

 இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிலம் கேட்ட போது அரசு தரப்பில் தரவில்லை. எனவே பொதுமக்கள் இணைந்து தான், 14 சென்ட் இடத்தை வாங்கினோம். தற்போது மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 68 லட்சம் ஒதுக்கப்பட்டு கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக அச்சிடப்பட்ட அடிக்கல் நாட்டு விழா வரவேற்பு போஸ்டரில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பெயர் அச்சிடப்பட வில்லை. எந்த அரசியல்வாதிகளின் பெயர்களையும் நாங்கள் குறிப்பிட வில்லை. இதனால் அதிமுகவினர் தூண்டுதல் பேரில் அதிகாரிகள், அடிக்கல் நாட்டு விழாவை ரத்து செய்துள்ளனர் என்றனர்.

இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது. இன்று விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மிகவும் பிரமாண்டமான முறையில் செய்துள்ளனர். இதற்கிடையே இந்த விழாவுக்காக அதிமுக தரப்பில் தளவாய்சுந்தரம் மற்றும் மாவட்ட செயலாளர் பெயர்களுடன் போஸ்டர் அச்சிடப்படும் என்று அக்கட்சியினர் கூறினர்

Related Stories: