அதி வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து

நாகர்கோவில், பிப்.13 : பார்வதிபுரம் மேம்பாலத்தில் அதி வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.

 நாகர்கோவில் பார்வதிபுரத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து கே.பி. ரோட்டில் ஐயப்பன் கோயில் வரையிலும், வெட்டூர்ணிமடம் சாலையில் மின் வாரிய அலுவலகம் வரையிலும் இந்த மேம்பாலம் ஒய் வடிவில் வருகிறது. இதில் ஐயப்பன் கோயில் அருகில் இருந்து தொடங்கும் மேமம்பாலம் ஒரு வழிப்பாதையாக உள்ளது. பார்வதிபுரம் சந்திப்பு பகுதியில் இந்த மேம்பாலம் ரவுண்டானா வடிவில் உள்ளது. இரவு நேரத்தில் இந்த மேம்பாலத்தில் பைக் ரேஸ் நடக்கிறது. மேம்பாலத்தில் 40 கி.மீ. வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவிப்பு உள்ளது. ஆனால் இந்த அறிவிப்புக்கு மாறாக வாகனங்கள் அதிக வேகத்தில் பயணிக்கின்றன.

வேகத்தடைகள் எதுவும் இல்லாததால் வாகனங்களின் அசுர வேக பயணத்தால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பைக்குகள், டெம்போ, கார்களில் செல்பவர்கள் அதி வேகமாக  சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த மேம்பாலத்தில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பைக்கில் இருந்த ஒரு வாலிபரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது. மற்றொரு வாலிபர் ேலசான காயத்துடன் தப்பினார். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேம்பாலத்தில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனை நடத்துவதுடன், பைக் ரேசில் ஈடுபடும் வாலிபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories: