பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை அறிவிப்பு இன்றி பாதாள சாக்கடை பணிக்கு துண்டிப்பு பள்ளி, கல்லூரி மாணவிகள் அவதி

நாகர்கோவில், பிப். 13:  நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் எந்தவித அறிவிப்பும் இன்றி பாதாள சாக்கடை பணிக்கு நேற்று பள்ளம் தோண்டப்பட்டதால் மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

 நாகர்கோவில் நகர பகுதியில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. சுமார் 98 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணி முடிந்து, சாலைகள் போடப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்து சில சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. குண்டும் குழியுமான இருந்த எஸ்பி அலுவலக சாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது.  தற்போது மீனாட்சிபுரத்தில் இருந்து ஒழுகினசேரி செல்லும் அவ்வை சண்முகம் சாலையில் ஒரு பகுதி மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் ரயில்வே சாலை உடைக்கப்பட்டு, பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி தொடங்குவதற்கு முன்பு முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இருப்பினும் காலை, மாலை வேளையில் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

 மேலும் அவசர கதியில் ரயிலை பிடிக்க செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில மாதத்திற்கு முன்பு நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பாதாள சாக்கடை பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டு மேன்ஹோல் பதிக்கப்பட்டது. அதன்பிறகு புதிய சாலை அமைக்கப்பட்டது.

 

இந்நிலையில் எந்த முன்அறிவிப்பும் இன்றி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பு பாதாள சாக்கடை பணிக்கு குழாய் பதிக்க நேற்று பள்ளம் தோண்டப்பட்டது.   இதனால் வெட்டூர்ணிமடம் வழியாக நாகர்கோவில் வரும் வாகனங்கள் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வரை வந்துவிட்டு திரும்பி செல்கிறது. மேலும் அறிவிப்பு இன்றி பள்ளம் தோண்டப்பட்டதால், காலையில் கல்லூரி, பள்ளிக்கு சென்ற மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Related Stories: