வேலூர் மாவட்டத்தில் துணிகரம் டிரைவர்களை தாக்கி 2 லாரிகளை கடத்தி சென்ற மர்ம கும்பல் காலி அட்டை பெட்டிகள் இருந்ததால் ஏமாற்றம்

காவேரிப்பாக்கம், பிப்.13: 2 லாரி டிரைவர்களை தாக்கி 2 லாரிகளை கடத்தி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(51). திருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன்(35). இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி குண்டூர் பகுதியில் இருந்து சுமார் ஒரு கோடி மதிப்பிலான 350 சிகரெட் பண்டல்களை 2 லாரிகளில் ஏற்றிக்கொண்டு ஓசூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு வந்தனர். பின்னர், மீண்டும் அதே கம்பெனியில் இருந்து காலி அட்டைபெட்டிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் 11ம் தேதி இரவு ஓசூரில் இருந்து குண்டூருக்கு புறப்பட்டனர்.      

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வந்தபோது இருவரும் தேசிய நெடுஞ்சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு அங்குள்ள டீ கடையில் டீ குடித்து விட்டு மீண்டும் குண்டூர் புறப்பட்டனர். ஆம்பூர் அருகே வந்தபோது இரவு 7.30 மணியளவில் மர்ம கும்பல் ஒரு லாரியில் வந்து கண்ணதாசன் லாரியை மடக்கி அதில் ஏறினர். பின்னர் டிரைவர் கண்ணதாசனை சரமாரியாக தாக்கி அவரை கயிற்றால் கட்டிப்போட்டு, லாரியில் கடத்தி வந்தனர்.

சிறிது தூரம் வந்த பிறகு லாரியை நிறுத்திய மர்ம நபர்கள், லாரியின் பின்பக்கம் திறந்து பார்த்தனர். அதில் வெறும் அட்டை பெட்டிகள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து மீண்டும் கண்ணதாசனை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த ₹4 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வாலாஜா டோல்கேட் அருகே கீழே தள்ளி விட்டு லாரியை எடுத்துச் சென்றனர். பின்னர், காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே லாரியை நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த கண்ணதாசன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.               

இதேபோல் இவருடன் வந்த செல்வகுமார் ஓட்டி வந்த லாரியை பின் தொடர்ந்த மற்ெறாரு மர்ம கும்பல் பள்ளிகொண்டா அருகே வரும்போது லாரியை மடக்கி அதில் ஏறி செல்வகுமாரை சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டு சென்னை நோக்கி லாரியை ஓட்டி வந்தனர். காவேரிப்பாக்கம் அருகே வரும்போது ஒரு ஓட்டல் அருகே செல்வகுமாரை கீழே தள்ளிவிட்டு லாரியை கடத்திச்சென்றனர். அப்போது, அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி படுகாயமடைந்த செல்வகுமாரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் நேற்று காலை ஓச்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஓட்டல் அருகே மர்ம நபர்கள் கடத்தி சென்ற லாரி இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த இரண்டு லாரி டிரைவர்களையும் விசாரணை செய்தபோது மர்ம நபர்கள் இந்தியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் லாரி டிரைவர்களை கடத்தியது வடமாநில கும்பலாக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.       

இதுதொடர்பாக இரு லாரி டிரைவர்களும் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி கைப்பற்றப்பட்ட 2 லாரிகளையும் பள்ளிகொண்டா காவல் நிலையம் கொண்டு வந்தார். ெதாடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இரண்டு லாரிகளிலும் ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்டிருப்பதால், லாரியை கடத்தினால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில், லாரியை கடத்திய மர்ம கும்பல் ஆங்காங்கே நிறுத்தி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர். வாகன நெரிசல்மிக்க தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர்களை சரமாரி தாக்கி லாரிகளை கடத்திச்சென்ற சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: