வேலூர் மத்திய சிறையில் நளினி- முருகன் தொடர் உண்ணாவிரதம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி

வேலூர், பிப்.13: வேலூர் மத்திய சிறையில் நளினி முருகன் தொடர் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. மேலும் உடல் நிலை குறித்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக கவனர் முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை கவர்னர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், 7 பேரின் விடுதலையில் கவர்னர் உடனடியாக முடிவெடுக்கக்கோரி கடந்த 7ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், கடந்த 9ம் தேதி முதல் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் மனைவி நளினியும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். ேமலும் ‘விடுதலை தொடர்பாக உடனடியாக முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகத்தை விட்டு செல்கிறோம்’ என்று கவர்னருக்கு உருக்கமான கடிதம் அனுப்பி வைத்தார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறை அதிகாரிகள் தொடர்ந்து 6வது நாளாக நேற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியிடம் வேலூர் சரக சிறை டிஐஜி ெஜயபாரதி, கண்காணிப்பாளர் ஆண்டாள் உண்ணாவிரத்தை கைவிடுமாறு நேற்று சமாதானம் செய்தனர். அதை நளினி ஏற்க மறுத்துவிட்டாராம்.

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் உள்ள நளினி, முருகன் ஆகியோரின் உடல்நிலை குறித்து சிறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து இருவருக்கும், சிறை மருத்துவமனையில் முதலுதவி வழங்குவதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: