மெட்ரோ ரயிலில் அதிகாரியாக வேலை என கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி ₹1.4 லட்சம் மோசடி

சென்னை, பிப்.13: மெட்ரோ ரயிலில் அதிகாரியாக வேலை என போலி பணி நியமன ஆணை வழங்கி ₹1.4 லட்சத்தை பெற்று, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட சகோதரர்கள் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, சாஸ்திரி நகரை சோந்தவர் நிஜாம் மொய்தீன், தனது சசோதரருடன் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. கடந்த ஜனவரி 4ம் தேதி என்னுடைய செல்போனுக்கு (75501 97024) மெட்ரோ ரயிலில் வேலை வாய்ப்பு என்றும், ₹18 ஆயிரம் சம்பளம் என்றும் குறுந்தகவல் வந்தது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது இ-மெயில் முகவரி ஒன்று கொடுத்து 2 புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்கள் அனுப்பும்படி கூறினர். அதன்படி நானும், என்னுடைய தம்பி சதாம் உசேன் ஆகியோர் புகைப்படங்கள் சான்றிதழும் அனுப்பினோம்.

அதன் பிறகு, என்னை தொடர்பு கொண்ட நபர், டெல்லி மெட்ரோவில் சீனியர் அதிகாரியாக இருப்பதாக கூறி, நானும் எனது தம்பியும் மெட்ரோ ரயில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மாதம் ஊதியம் ₹28 ஆயிரம் என்றும் 15 நாட்கள் பயிற்சிக்கு தலா ₹4500 கட்ட வேண்டும் என கூறிய அவர், தனியார் வங்கி கணக்கு எண்ணை கொடுத்தார். அதன்படி நாங்களும் ₹9 ஆயிரம் கட்டினோம்.

பின்னர் ஒரு வாரம் கழித்து, எங்கள் இருவருக்கும் மெட்ரோ ரயிலில் அதிகாரி பணி வழங்கப்பட்டதற்கான பணி நியமன ஆணைகள் கூரியர் மூலம் வீட்டுக் வந்தது. இதையடுத்து எங்களை தொடர்பு கொண்ட அவர்கள், 2 பேரும் தலா ₹26,500 செலுத்த வேண்டும் என்று கூறினர். வேலை கிடைத்த மகிழ்ச்சியில் நாங்கள் ₹53 ஆயிரத்தை கட்டினோம்.

அதன் பிறகும் அவர்கள் தொடர்ந்து மீண்டும் 2 பேரும், தலா ₹37,500 கட்ட வேண்டும் என்று கூறினர். அவர்கள் சொன்னபடி மீண்டும் ₹75 ஆயிரம் கட்டினோம். தொடர்ந்து தொடர்பு கொண்ட அவர்கள், ₹4 லட்சம் கட்ட வேண்டும் என்று கேட்டனர். இதனால் எங்களுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, கடந்த 4ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் சென்று எங்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளை அதிகாரிகளிடம் காட்டினோம். அப்போது, எங்களுக்கு வழங்கப்பட்டது போலி பணி நியமன ஆணை என தெரிந்தது. இதனால், போலி பணி நியமன ஆணை வழங்கி ₹1.4 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை பெற்று தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: