சிக்கராயபுரம், எருமையூர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் தண்ணீர் எடுக்கும் திட்டத்தில் பல கோடி முறைகேடு

சென்னை, பிப். 13: சிக்கராயபுரம் மற்றும் எருமையூர் கல் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தில் சென்ைன குடிநீர் வாரிய அதிகாரிகள் பல கோடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.  சென்னை மாநகர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் உள்ளன. பருவ மழை பொய்த்ததால் 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் தற்போது 0.8 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. 4 ஏரிகளிலும் நீர் இருப்பு குறைவாக உள்ள நிலையில், பூண்டி ஏரியில் 12 மில்லியன் லிட்டர், செம்பரம்பாக்கம் ஏரியில் 10 மில்லியன் லிட்டர், புழல் ஏரியில் 80 மில்லியன் லிட்டர் வீதம் தினமும் குடிநீருக்காக விநியோகிக்கப்படுகிறது.

இதை தவிர்த்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தினமும் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. மேலும், வீராணம் ஏரியில் இருந்து 80 மில்லியின் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு 800 மில்லியன் லிட்டர் (80 கோடி லிட்டர்) தேவைப்படுகிறது. ஆனால், தற்போது  382 மில்லியின் லிட்டர் தான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில், 550 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைக்கு தருவதாக குடிநீர் வாரியம் கூறி வருகிறது. இந்த நிலையில் ஏரிகளில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வரும் நிலையில், கடந்தாண்டை போன்று  கல் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீராக விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, ₹11 ேகாடியில் பைப்லைன் மற்றும் ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்டு சிக்கராயபுரம் கல்குவாரியில் தேங்கியுள்ள நீரை பெற்று தினமும் 30 மில்லியின் லிட்டர் பொதுமக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. இதை தவிர்த்து ₹19.17 கோடி செலவில் எருமையூர் குவாரியில் இருந்து நீர் எடுக்கவும், ₹8.88 கோடியில் 171 புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் ₹8.05 கோடியில் 423 புதிய இந்திய மார்க் 2 பம்புகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகரில்  கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எனவே, அதற்கான நிரந்தர திட்டம் ஒன்றை சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்த வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் பற்றாக்குறை தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறி கோடிக்கணக்கில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்தாண்டு ₹156 கோடி வரை தமிழக அரசு சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் கூட முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, கடந்தாண்டு சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து பைப்லைன் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதற்காக, ₹13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 600 மி.மீ விட்டமுள்ள டிஐ இரும்பு குழாய்கள் 2900 மீட்டர் நீளத்துக்கும் 600 மிமீ விட்டமுள்ள பிளாஸ்டிக் குழாய்கள் 900 மீட்டர் நீளத்துக்கும் பதிக்கப்பட்டது.

இதில், தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் விலை பட்டியலை  அடிப்படையாக வைத்து தான் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அதிகாரிகள் கோடிக்கணக்கில் நிர்ணயம் செய்து அரசிடம் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அதாவது, 600 மிமீ பிளாஸ்டிக் குழாய் ஒரு மீட்டருக்கு ₹1,0862 ஆகும். இந்த ஏரியில் பிளாஸ்டிக் குழாய் 900 மீட்டர் பதிக்கப்பட்ட நிலையில், ₹9 லட்சத்து 77 ஆயிரத்து 5800 மட்டுமே செலவாகும். டிஐ இரும்பு குழாய் ஒரு மீட்டர் ₹3570 ஆகும். 2,900 மீட்டருக்கு பதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் ₹3 கோடியே 93 லட்சத்து 53 ஆயிரம் மட்டுமே செலவாகி இருக்கும். அதன்படி பார்த்தால் மொத்தம் ₹4 கோடியே 91 லட்சத்து 28 ஆயிரத்து 800 ஆகியுள்ளது. இதை தவிர்த்து அங்கு பம்பிங் செய்து தண்ணீர் எடுக்க இயந்திரம், ஜெனரேட்டர் இயந்திரம் சேர்த்து ₹9 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ₹5 கோடி வரை மட்டுமே செலவாகியுள்ளது.

ஆனால், இதற்கு ₹13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பைப் லைன் அமைத்து 1 வருடம் மட்டுமே ஆன நிலையில், ₹11 கோடியில் மீண்டும் சேதமடைந்த பைப் லைன் புதிதாக அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்ட பைப் லைன் தரமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில்,  900 மீட்டர் பிளாஸ்டிக் குழாய் அமைக்கும் பணி மட்டுமே நடந்து வருகிறது. அதன்படி பார்த்தால் ₹10 லட்சம் மட்டுமே பைப் லைன் செலவாகியுள்ளது. மேலும், டிஐ இரும்பு குழாய் ஒரு சில இடங்களில் மட்டுமே மாற்றப்படவுள்ளது.

அதாவது, 200 மீட்டர் வரை மட்டுமே மாற்றப்படுகிறது. அதன்படி பார்த்தால் ₹27 லட்சத்து 90 ஆயிரம் மட்டுமே செலவாகிறது.  வெறும் ₹48 லட்சம் மட்டுமே செலவாகவுள்ள நிலையில் தமிழக அரசு ₹11 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ₹19.17 கோடியில் எருமையூர் குவாரியில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது. அங்கிருந்து 7 கி.மீட்டருக்கு மட்டுமே பைப் லைன் அமைக்கப்படுகிறது. இங்கும், 2,500 மீட்டர் டிஐ இரும்புகுழாய், 500 மீட்டர் பிளாஸ்டிக் பைப் லைன் மட்டுமே அமைக்கப்படுகிறது.  ஜெனரேட்டர், பம்பிங் செய்து இயந்திரம் என சேர்த்து மொத்தம் ₹4 கோடி செலவு மட்டுமே ஆகும் நிலையில், ₹19.17 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: