காசநோய், எச்ஐவி நோயாளிகளை கண்டறிய நடமாடும் மருத்துவக் குழு

காஞ்சிபுரம், பிப்.13: காசநோய், எச்ஐவி தொற்று உள்ளவர்களை கண்டறிய நடமாடும் மருத்துவக்குழுவை, கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார் மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்னும் நுண்ணுயிர் கிருமியினால் உண்டாகும் காசநோய் என்பது காற்றின் மூலம் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும்.உலகின் காசநோயாளிகளில் நான்கில் ஒரு பங்கு நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர்.  குழந்தைகள் முதல் முதியவர் வரை பாதிக்கின்ற இந்நோயினை 2025 க்குள் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, அதிநவீன காசநோய் கண்டறியும் கருவி கொண்ட வாகனத்தையும் எச்ஐவி பரிசோதனை வாகனத்தையும் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.மருத்துவ குழுவுடன் செல்லும் இந்த வாகனம் வரும் 16ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, காசநோய் மற்றும் எச்ஐவி தொற்று உள்ளவர்களை கண்டறிய உள்ளது.

அதன்படி இன்று திரிசூலம், பல்லாவரம், திருநீர்மலை பகுதிகளிலும், நாளை ரெட்டிப்பாளையம், ராயமங்களம், முள்ளிப்பாக்கம், 15ம் தேதி சதுரங்கப்பட்டினம், செய்யூர், சூனாம்பேடு பகுதிகளிலும், 16ம் தேதி காந்திநகர், செம்பூண்டி, பெரும்பாக்கம், ஆதவப்பாக்கம் பகுதிகளில் ஆய்வு செய்யப்படும். எச்ஐவி, காசநோய் மற்றும் எதிர்ப்புத் தன்மை ஆகியவற்றை குறைந்த நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் இந்த நடமாடும் மருத்துவ குழுவினர் முகாம் நடத்த உள்ளனர். எனவே, இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கேட்டு கொண்டார். தொடர்ந்து, காசநோய் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன காசநோய் கண்டறியும் கருவியை மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஜீவாவிடம், கலெக்டர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசம்), செந்தில்குமார், டாக்டர் மதன்குமார் , சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: