திருமுல்லைவாயலில் சமூக விரோதிகளின் கூடாரமான பூங்கா

ஆவடி, பிப். 13:  ஆவடி  நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பூங்காவில் மின் விளக்குகள், இருக்கைகள்,  விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கிறது. அது சமூகவிரோதிகளின் கூடாரமானதால் நடைபயிற்சிக்கு செல்வோர் அச்சமடைகின்றனர். ஆவடி நகராட்சி, 8வது வார்டான  திருமுல்லைவாயல் பகுதியில் திருமுல்லைவாயல் காலனி, வடக்கு முல்லை நகர்.  கிழக்கு தென்றல் நகர் என, 20க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இப்பகுதி  மக்கள் பொழுதுபோக்கு மற்றும் நடைப்பயிற்சி செய்யவும், சிறுவர்கள்  விளையாடவும் இப்பகுதிகளில் பூங்கா வசதி இல்லாமல், பல ஆண்டுகளாக அவதிப்பட்டு  வந்தனர். இது குறித்து, பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து, திருமுல்லைவாயில், கிழக்கு  தென்றல் நகர் பகுதியில் பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.  இதன்படி, ரூ.50 லட்சம் செலவில் பூங்கா 2014ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த  பூங்காவில், நடைபயிற்சியில் ஈடுபட நடைப்பாதை, சிறுவர்கள் விளையாட  ஊஞ்சல்கள், சறுக்கு பாதை, ராட்டினம், இருக்கைகள், பூச்செடிகள், மின்  விளக்குகள், சி.சி.டி.வி கேமரா உள்ளிட்டவைகளுடன் பூங்கா அழகிய தோற்றத்தில் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை அப்பகுதி மக்கள் காலை, மாலை  வேளைகளில் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக முதியோர்கள், பெண்கள், இளைஞர்கள்  என அனைவரும் நடைபயிற்சி சென்று வந்தனர். மேலும், பூங்காவில் சிறுவர்,  சிறுமிகள் அங்குள்ள பல்வேறு உபகரணங்களில் விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை  கழித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக பூங்காவை நகராட்சி நிர்வாகம் சரிவர  பராமரிக்காமல் விட்டு விட்டது. இதனால், பூங்காவை சிறுவர்கள், பொதுமக்கள்  பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள்  கூறியதாவது:

கிழக்கு தென்றல் நகர் பூங்காவில் சமூக விரோதிகள் நள்ளிரவில்  புகுந்து மின் விளக்குகள், இரும்பாலான பொருட்களையும் உடைத்தும்,  திருடியும் சென்றுள்ளனர். மேலும், பூங்கா பராமரிக்காமல் விட்டதால்  ஊஞ்சல்கள், ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் உடைந்து,  துருப்பிடித்து கிடக்கின்றன. இதனால், சிறுவர்கள் மாலை நேரத்தில் விளையாட  இடம் இல்லாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல்,  பூங்காவில் உள்ள, பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாததால், அவைகள் வெயிலில்  கருகி காட்சி அளிக்கிறது. இங்குள்ள நீர் ஊற்றில் மோட்டார் பொருத்ததால்  பயனின்றி கிடக்கிறது. இதனால், நீர் ஊற்றை கண்டுகளிக்க முடியாமல் குழந்தைகள்  இன்னல் அடைந்து வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், பூங்கா முழுவதும்,  தேவையற்ற செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளிக்கின்றன.

இதில், பாம்பு,  தேள் என விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றன.  இதனால், சிறுவர்கள், பெண்கள் அச்சத்துடனே வந்து செல்ல வேண்டிய  கட்டாயத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், அங்குள்ள இருக்கைகளை சுற்றி   முட்செடிகள் வளர்ந்து இருப்பதால், பொதுமக்கள் உட்கார முடியவில்லை. . மேலும், பல லட்சம் செலவில்  அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரி நகராட்சி அதிகாரிகளிடம்  பொது நலச்சங்கங்கள் சார்பில் பல முறை புகார் செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும்,  அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்கின்றனர்.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து திருமுல்லைவாயல் பூங்காவை  சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரோந்து செல்லாத போலீசார்

சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,  பூங்காவில் மின்  விளக்குகள் எரியாததால் அதிகாலை, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து  கிடக்கிறது. இதனை பயன்படுத்தி பூங்காவில் நடைப்பயிற்சிக்கு வரும்  முதியோர்கள், பெண்களிடம் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. மேலும், பூங்காவில் இரவு,  பகல் பாராது கஞ்சா புகைப்பது, மது அருந்துவது ஆகிய குற்ற செயல்களில் சமூக  விரோதிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் பூங்காவை சுற்றியுள்ள பகுதியில்  போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாமல் அலட்சியமாக உள்ளனர் என்றனர்.

Related Stories: