தேர்தல் பணியாளர்கள் சுலபமாக சென்றுவர வாக்கு சாவடிகளுக்கு ‘சாட்டிலைட்’ வரைபடம்

திருவள்ளூர், பிப்.13: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சுலபமாக சென்றுவர வாக்கு சாவடிகளுக்கு சாட்டிலைட் வரைபடம் தயாரிப்பு நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊருக்கும், வாக்குச் சாவடிக்கும் தேர்தல் பார்வையாளர்கள், கண்காணிப்பு குழுவினர், பாதுகாப்பு படையினர், மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் குழப்பமின்றி சென்றுவர சாட்டிலைட் வரைபடங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.சட்டமன்ற தொகுதி வாரியாகவும், மாவட்ட அளவிலும் இந்த வரைபடங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டது. தற்போது ஒரு சட்டமன்ற தொகுதியினை 5 மண்டலங்கலாக பிரித்தும், ஒவ்வொரு மண்டலத்திலும் அமைந்துள்ள ஊர்கள் குறித்தும், பின் ஒவ்வொரு ஊர், கிராமங்கள் வாரியாகவும் வரைபடங்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த வரைபடங்களில் ஒரு ஊருக்குள் நுழைவதிலிருந்து முதலில் செல்ல வேண்டிய வாக்குச்சாவடி, போலீஸ் நிலையம், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தபால் அலுவலகம், தீயணைப்பு நிலையம், பெட்ரோல் பங்க், உணவகங்கள், கண்காணிப்பு குழுக்களின் முகாம்கள் உள்ளிட்டவற்றின் அமைவிடங்களுடன் அனைத்து விபரங்களையும் கொண்டதாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர போக்குவரத்து வழித்தடங்கள், ஒவ்வொரு ஊருக்கான இணைப்பு சாலைகள், தூரம் உள்ளிட்ட விபரங்களும் இதில் இடம்பெறும். இந்த வரைபடங்கள் தயாரிக்கும் பணியினை சர்வே துறையினர் செய்து வருகின்றனர்.

Related Stories: