சோழவரம் வக்கீல் கொலை சம்பவம் 2வது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி மிரட்டியதால் கொன்றோம்: சரணடைந்த 5 பேர் பரபரப்பு வாக்குமூலம்

புழல்: சோழவரத்தில் கருத்து வேறுபாட்டால் பெற்றோருடன் வசித்து வரும்  2வது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி மிரட்டியதால் வக்கீலை  தீர்த்துக்கட்டினோம் என்று போலீசில் சரணடைந்த 5 பேர் பரபரப்பு வாக்குமூலம்  அளித்துள்ளனர். சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி  ஆதித்தன் நகர், ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (47).  வழக்கறிஞர். இவர், சென்னை, திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த 19  ஆண்டுகளுக்கு முன்பு பியூலா (எ) சங்கரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்  சுரேஷ்குமார்.  தம்பதியருக்கு 7 மாதங்களுக்கு முன்புதான் செயற்கை  கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் நேற்று  முன்தினம் காலையில் திருவள்ளூர் நெடுஞ்சாலை சோழவரம், கலைஞர் கருணாநிதி நகர்  போலீஸ் பூத் அருகே பால்வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பி  கொண்டிருந்தார் சுரேஷ்குமார்.

 

அப்போது 3 பைக்கில் வந்த 6 பேர் கும்பல்,  சுரேஷ்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. ,  சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த  வழக்கு தொடர்பாக, நேற்று முன் தினம் மாலை சிவந்தி ஆதித்தன் நகரை சேர்ந்த  மாரியப்பன், சரத்குமார், ஜான்சன், காமராஜ், சூர்யா ஆகியோர் மீஞ்சூர் காவல்  நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் சோழவரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  சோழவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 5 பேரும் அளித்த  வாக்குமூலம் வருமாறு: எங்கள் உறவினரான ரம்யா (23) என்பவரை சுரேஷ்குமார்,  கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து 2வது திருமணம் செய்தார். அவருடன்  ராஜீவ் காந்தி தெருவில் தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில்  கருத்து வேறுபாடு காரணமாக, சுரேஷ்குமாரிடம் ேகாபித்துக்கொண்டு, பெற்றோர்  வீட்டுக்கு கடந்த ஜனவரி மாதம் ரம்யா சென்றார். அதற்கு பிறகும் தன்னுடன்  வரும்படி ரம்யாவை சுரேஷ்குமார் மிரட்டினார். அதனால் அவரை எச்சரித்தோம்.  உடனே மாதவரம் போலீசில் சுரேஷ்குமார் புகார் செய்தார். மேலும் எங்களை  தீர்த்துக்கட்ட சுரேஷ்குமார், திட்டம் வகுத்தார். அதனால் நாங்கள் முந்தி  கொண்டு, சுரேஷ்குமாரை தீர்த்துக்கட்டினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.  போலீசார் 5 பேரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: