மாணவி கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் புதிய வியூகம்: டி.ஐ.ஜி., தலைமையில் ஆலோசனை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கீச்சலம் ஊராட்சி, வெங்கடாபுரம் பகுதியை  சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). இவர், கீச்சலம் அரசு  உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7ம்தேதி சரிதா திடீரென மாயமானார். இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, பொதட்டூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில்  போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் 10ம் தேதி, அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் நாயுடுவின் கரும்பு தோட்டத்துக்கு அருகேயுள்ள கால்வாய் கரையில் சரிதாவின் எலும்புக்கூடு,  செருப்பு, கிழிந்த நிலையில் பள்ளி சீருடை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி  போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மாணவியின் எலும்பு உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களை டிஎன்ஏ சோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை டாக்டர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இவற்றை  சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, நேற்று காலை தடயவியல்  துறை அதிகாரி நளினி மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் செருப்பு, கொலுசு,  கம்மல் ஆகியவற்றை சேகரித்தனர். இதில், யாருடைய கைரேகைகள் பதிவாகி உள்ளன என ஆய்வு செய்தனர். இந்த நிலையில், மாணவியின் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதைதொடர்ந்து, டி.ஐ.ஜி., தேன்மொழி, பொதட்டூர்பேட்டை  காவல் நிலையத்திற்கு வந்து, திருத்தணி டி.எஸ்.பி., சேகர், ஆர்.கே., பேட்டை  சரக இன்ஸ்பெக்டர் ரமேஷ், பொதட்டூர்பேட்டை, சப்-இன்பெக்ஸ்டர் ரவி, உதவி  ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோருடன், சரிதாவின் கொலை வழக்கு  சம்பந்தமாக நேற்று ஆலோசனை நடந்தி விட்டு சென்றார். அதன்பின்னர், கொலையாளிகளை  எப்படி பிடிப்பது என, போலீசார் பல்வேறு வியூகங்களை அமைத்து,   தேட திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: