மெட்ரோ ரயிலில் அதிகாரி பணி என போலி பணி ஆணை வழங்கி 1.40 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட சகோதரர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: மெட்ரோ ரயிலில் அதிகாரி பணி என போலி பணி நியமன ஆணை வழங்கி 1.40 லட்சம் பணத்தை பெற்று, மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சகோதரர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, சாஸ்திரி நகரை சோந்தவர் நிஜாம் மொய்தீன், தனது சசோதரருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

 கடந்த ஜனவரி 4ம் தேதி என்னுடைய செல்போனுக்கு 75501 97024 மெட்ரோ ரயிலில் வேலை வாய்ப்பு என்றும் 18 ஆயிரம் சம்பளம் என்றும் குறுந்தகவல் வந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது இ-மெயில் முகவரி ஒன்று கொடுத்து இரண்டு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்கள் அனுப்புமாறு கூறினர்.

அதன்படி நானும் என்னுடைய தம்பி சதாம் உசேன் சான்றிதழும் அனுப்பினோம். அதன் பிறகு, என்னை தொடர்பு கொண்ட நபர் டெல்லி மெட்ரோவில் சீனியர் அதிகாரியாக இருப்பதாக கூறி, நானும் எனது தம்பியும் மெட்ரோ ரயில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மாதம் ஊதியம் 28ஆயிரம் என்றும் 15 நாட்கள் பயிற்சிக்கு தலா 4500 பணம் கட்ட வேண்டும் என கூறி, தனியார் வங்கி கணக்கு எண்ணை கொடுத்தனர். அதன்படி நாங்களும் ₹9 ஆயிரம் பணம் கட்டினோம். பிறகு ஒரு வாரம் கழித்து, எங்கள் இருவருக்கும் மெட்ரோ ரயிலில் அதிகாரி பணி வழங்கப்பட்டதற்கான பணி நியமன ஆணைகள் தனியார் கொரியர் மூலம் வீட்டிற்கு வந்தது. அதன் பிறகு தொடர்பு கொண்ட அவர்கள், இருவரும் தலா 26,500 பணம் செலுத்த வேண்டும் என்று கூறினர். வேலை கிடைத்த மகிழ்ச்சியில் நாங்கள் 53 ஆயிரம் பணத்தை கட்டினோம்.  

அதன் பிறகும் அவர்கள் தொடர்ந்து மீண்டும் இருவரும் தலா 37,500 கட்ட வேண்டும் என்று கூறினர். அவர்கள் சொன்னபடி இருவரும் சேர்ந்து 75 ஆயிரம் பணம் கட்டினோம். பிறகும் தொடர்பு கொண்டு மேலும் 4 லட்சம் கட்ட வேண்டும் என்று கேட்டனர்.   இதனால் எங்களுக்கு சந்தேகம் வந்தது. உடனே கடந்த 4ம்தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்கு சென்று எங்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளை அதிகாரிகளிடம் காட்டினோம். அப்போது தான், எங்களுக்கு வழங்கப்பட்டது போலி பணி நியமன ஆணை என தெரியவந்தது. இதையடுத்து போலி பணி நியமன ஆணை வழங்கி 1.40 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

* சென்னை தி.நகர் உண்ணாமலை அம்மன் தெருவை சேர்ந்தவர் லட்சுமி(62). இவர் தனது கணவர் ராஜகோபாலுடன் தனியாக வசித்து வருகிறார். குழந்தை இல்லாததால் இவர்கள் வாடகை பணத்தை வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று காலை சமையல் செய்ய லட்சுமி வீட்டின் சமையல் அறையில் உள்ள காஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார். காஸ் லைட்டர் சரியாக வேலை செய்ய வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் அறை முழுவதும் காஸ் பரவியது. அப்போது பூஜை அறையில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருந்த விளக்கின் தீயால் அறை முழுவதும் தீப்பிடித்தது. இதில், லட்சமியின் சேலைியில் தீப்பிடித்து உடல் முழுவதும் எரிந்தது.  அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து  தீயை அணைத்தனர்.  பாண்டி பஜார் போலீசார்  லட்சுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். 80 விழுக்காடு தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த லட்சுமி நேற்று மாலை உயிரிழந்தார்.

சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(36). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக தெரிந்த நபர்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால், கடன் கொடுத்த நபர்கள் பணத்தை மோகன்ராஜிடம் திரும்ப கேட்டுள்ளனர்.  இதனால் மனமுடைந்த மோகன் ராஜ், வீட்டில் வைத்திருந்த தூக்க மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு ேநற்று தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மோகன் ராஜை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* மாதவரம் புக்ராஜ் நகரில் கஞ்சா விற்கப்படுவதாக மாதவரம் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, நேற்று இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் சிங் (36) என்பவர் வீட்டில் கஞ்சா விற்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

* மணலி பெரியதோப்பு தெருவை சேர்ந்தவர் சங்கர் (61). மணலி சிபிசிஎல் மத்திய அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் கான்ட்ராக்டராக இருந்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல நிறுவனத்தில் நடைபெறும் பணியை பார்வையிட சென்றார். அப்போது, நிறுவன வளாகத்தில் சங்கர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள்  உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்,  வழியிலேயே சங்கர்  பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சங்கரின் மனைவி லீலா மணலி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் தனது கணவர் தலையில் காயம் உள்ளதால் அவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இந்த மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: