துறைமுகம் தொகுதியில் செயல்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் 5 ஆக குறைப்பு: திமுக உறுப்பினர் சேகர்பாபு குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில கேள்வி நேரத்தின் போது துறைமுகம் பி.கே.சேகர்பாபு(திமுக) பேசியதாவது: துறைமுகம் தொகுதியில் 8 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வந்தன. இதில் கிழக்கு கடற்கரை சாலையில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் 6 மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. ஜூல்ஸ் சாலையில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது பி.ஆர்.என்.பகுதியிலே இணைக்கப்பட்டது. அதே போல வடமலை பிள்ளை தெருவில் செயல்பட்ட வந்த ஆரம்ப சுகாதார நிலையம் பி.கே.கார்டன் பகுதியிலே இணைக்கப்பட்டது. 8 ஆரம்ப சுகாதார நிலைங்கள் இருந்த நிலையில், 5 சுகாதார நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் தான் ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்துகிறார்கள். எனவே, அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மகப்பேறு மருத்துவமனையை உருவாக்கி தர வேண்டும். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: உறுப்பினர் சொன்ன கருத்தும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு முதல்வரின் பார்வைக்கு எடுத்து செல்லப்படும்.

பி.கே.சேகர்பாபு: கருவுற்றிருக்கின்ற தாய்மார்கள் முழு நேர சிகிச்சைக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மருத்துவமனைகளில் பார்த்தால் 64 மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளன.

அந்த மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு கருவுற்றிருக்கின்ற தாய்மார்களுக்கு தொடர்ந்து 9 கால சிகிச்சைக்கு பிறகு, பிரசவத்திற்கு உண்டான வசதிகள் அந்த மருத்துவமனையில் இருந்தால் தாய், சேய் நலன் பாதுகாக்கப்படும். ஆனால், இந்த கருவுற்றிருக்கின்ற தாய்மார்களுக்கு போதிய ஆய்வு கூடங்கள் இல்லை. உதாரணமாக ‘’அல்ட்ரா சவுண்ட்’’ என்று சொல்லப்படுகின்ற அந்த கருவி அனைத்து மருத்துவமனைகளிலும் இல்லை. புற்றுநோயை கண்டுபிடிக்கக்கூடிய, கர்ப்பப்பை புற்றுநோயை கண்டுபிடிக்க கூடிய ஒரு சிறிய அளவில் இருக்கின்ற கருவி கூட இல்லை.

இவற்றை ஏற்படுத்தி கொடுத்தால் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். அமைச்சர் எஸ்.பி.ேவலுமணி: முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: