4 அடி பள்ளத்தில் உள்ளதால் மழைகாலத்தில் பாதிப்பு திருவான்மியூர் பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: பேரவையில் வேளச்சேரி உறுப்பினர் வாகை சந்திரசேகர் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி வாகை சந்திர சேகர்(திமுக) பேசியதாவது: பிராட்வே, திருவான்மியூர், கோயம்பேடு பகுதியில் இருந்து வேளச்சேரி காந்தி சிலை வரை மீண்டும் பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவான்மியூர் பஸ் நிலையம் மற்றும் பணிமனை 2.93 ஏக்கர் அளவில் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து தான் சென்னை நகருக்கு பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவான்மியூர் பஸ் நிலையம் 4 அடி பள்ளத்தில் உள்ளது. மழைக்காலத்தில் பஸ்நிலையத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அங்கு கழிவறை வசதி இல்லை. பேருந்து நிலையத்திற்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு, பச்சிளங்குழந்தைகளை பராமரிப்பதற்கான அறை இல்லை. எனவே பஸ் நிலையத்தை மேம்படுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார் இதற்கு பதில் அளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில், திருவான்மியூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த 2011ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேம்பால பணிகள் காரணமாக நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்காக தனி அறை ஏற்படுத்தி கொடுக்கப்படும். மேலும் வேளச்சேரி காந்தி சிலை வரை கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்”  என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: