தேனியில் பரபரப்பு வனவிலங்குகளுக்காக கும்பக்கரை அருவி பகுதியில் தொட்டியில் நீர்தேக்கும் பணி

பெரியகுளம், பிப்.12: பெரியகுளம் அருகே மேற்கு மலைத்தொடர்ச்சி கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியான தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டெருமை, சிறுத்தை, புலி,மான் சருகுமான், குரங்கு, முயல், பறவைகள் என பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருன்கிறன.

இந்நிலையில் கோடைகாலம் துவங்கி விட்ட நிலையில் கும்பக்கரை அருவி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் அவைகளுக்கு தேவைப்படும் குடிநீர் அளவிற்கு வனத்துறையினர் தொட்டி அமைத்து அதில் நீர்நிரப்பி வருகின்றனர். வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து எந்த வித அச்சமின்றி வந்து நீரை குடித்து செல்வதற்காக அமைதியான சூழலில் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

தேவதானப்பட்டி வனச்சரகர் சுரேஷ்குமார் கூறுகையில்,`` கோடை காலம் துவங்கி கும்பக்கரை ஆற்றில் வெள்ள ஓட்டம் நிற்கும் நேரங்களில் வனப்பகுதியில் இருக்கக்கூடிய வன விலங்குகளும், பறவைகளும் வேறு இடத்திற்கு இடமாற்றம் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும், வனவிலங்குகளை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் தொட்டிகள் அமைத்து அதில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வனப்பகுதியில் இருந்து வருகின்ற ஓடைகள் பகுதியில் ஆங்காங்கே நீர்தேக்கங்கள் அமைத்து நீரை சேமித்து வைக்கிறோம். இதனால் வன விலங்குகள் நீரைப் பருகிவிட்டு வனப்பகுதிக்குள் செல்வதற்காக வசதியாக இருக்கும் என்பதற்காகவே இவ்வாறான தொட்டிகள் அமைத்து நீரை நிரப்பி தினந்தோறும் கவனித்து வருகின்றோம்’’ என கூறினார்.

Related Stories: