பொதுப்பணித்துறை துரித நடவடிக்கை கொழுக்குமலையில் உள்ள 6 ஆயிரம் அடி பள்ளத்தாக்கு பகுதியில் ஆபத்தான பயணம் சுற்றுலாப்பயணிகள் குறித்து தேனி கலெக்டரிடம் புகார்

தேனி, பிப். 12: தமிழக, கேரள எல்லைப்பகுதியான கொழுக்கு மலைப்பகுதியில் 6 ஆயிரம் அடி பள்ளதாக்கில் ஆபத்தான வழியில் சுற்றுலாப்பயணிகள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி கலெக்டரிடம் எஸ்டேட் நிர்வாகி கோரிக்கை மனு அளித்தார்.

தேனி, கேரள எல்லையில் கொழுக்குமலை உள்ளது. இங்கு தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டின் மேலாளர் ஜானி என்பவர் நேற்று தேனி கலெக்டர் பல்லவிபல்தேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதுகுறித்து ஜானி கூறியதாவது : கேரள, தமிழக எல்லைப்பகுதியில் கொழுக்குமலை அமைந்துள்ளது. சூரியநெல்லி பகுதியில் அதிகாலையில் சூரிய உதயம் அழகாக தெரியும் என்பதால், இதனைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். வாரநாட்களில் நாளொன்றுக்கு 50 ஜீப்புகளிலும், வார விடுமுறை தினங்களில் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட வாகனங்களிலும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். சுற்றுலாவாக வரும் வாகனங்களுக்கும் வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கும் கேரள அரசு அனுமதி அளித்து அடையாள அட்டையும் வழங்கியுள்ளது.

இதன்படி, அதிகாலை இப்பகுதிக்கு சுற்றுலாவாக அழைத்து வருபவர்கள் கொழுக்கு மலைக்கு முன்பாக பிப்டா மலைக்கு செல்ல சுமார் 5 அடி அகலமே கொண்ட குறுகலான பாதை உள்ளது. இந்த பாதையில் சுற்றுலாப் பயணிகளை ஜீப்பில் வருவோர் அழைத்துச் செல்கின்றனர். இதில் 5 அடி பாதையை ஒட்டி 6 ஆயிரம் அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு உள்ளது. கால்தவறி இந்த பள்ளத்தில் விழநேர்ந்தால் தமிழக எல்லையான குரங்கனியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பிணமாகத்தான் விழநேரிடும். இந்த ஆபத்தான பகுதிக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் செல்ல தடைவிதிக்க வேண்டும்.

பிணமாக விழும் பகுதி தமிழகத்தில் உள்ளதால், இந்த பாதையில் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடைவிதிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கேரளஅரசுக்கு அறிவுறுத்தவே இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: