சைக்கிளில் சுற்றுலா சென்ற வெளிநாட்டு பயணி மீது ஆட்டோ மோதல்

ஈத்தாமொழி, பிப். 12 : இங்கிலாந்து நாட்டை ேசர்ந்தவர் ஜாண் ஜெர்விஸ்(64). இவரது மனைவி கில்லியன் ஜெர்விஸ். இருவரும் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து பல பகுதிகளையும் சுற்றிப்பார்த்து வந்தனர்.

 இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கணவன், மனைவி இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து தனித்தனி சைக்கிள்களில் குமரி மாவட்டம் சிற்றாறு அணைப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து குளச்சல்- ராஜாக்கமங்கலம் சாலையில் கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

 கணபதிபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக ஜாண் ஜெர்விஸின் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 சம்பவம் குறித்து ஜாண் ஜெர்விஸின் மனைவி கில்லியன் ஜெர்விஸ் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை, குமரி, தூத்துக்குடி இன்ஜி. கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா

நாகர்கோவில், பிப்.12 : திருநெல்வேலியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல கல்லூரி, தூத்துக்குடியில் உள்ள பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா வருகிற 16ம்தேதி காலை 10.30க்கு, நாகர்கோவில் கோணத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கிறது. விழாவில் 3 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சூரப்பா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ.  இயக்குனர் மூக்கையா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோணம் பொறியியல் கல்லூரி முதல்வர் ரெங்கராஜா தலைமையில் பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள்.

Related Stories: