பெரியார் பஸ்ஸ்டாண்ட் கட்டிட இடிபாடுகளில் ஆபத்தான தேடல்

மதுரை, பிப். 12: பெரியார் பஸ்ஸ்டாண்ட் கட்டிட இடிபாடுகளில் இரும்பு கம்பிகளை விற்பதற்காக ஆபத்தான முறையில் பிரித்தெடுத்து வருகின்றனர்.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து சுற்றிலும் 1,300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடங்கள், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு நவீனமாக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திருவள்ளுவர் பஸ்ஸ்டாண்ட்டுகளை இணைத்து ரூ.159 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய நவீன பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட இருக்கிறது. நூறு ஆண்டு பழைமைவாய்ந்த பெரியார் பஸ்ஸ்டாண்ட்டினுள் 446 கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியிருந்தது. தற்போது புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணிக்காக இந்த கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொக்லைன் உள்ளிட்ட ராட்சத இயந்திரங்கள் கொண்டு இடிப்பதற்கு கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. அந்த வகையில் 70 சதவிகிதம் பணிகள் இதுவரை முடிந்துள்ளது. கட்டடங்கள் இடிக்கப்பட்டு இடிபாடுகளாக கிடக்கிறது.

அரைகுறையாக விழுந்து கிடக்கும் கட்டடங்களில் எலும்புகளை போல இரும்புக்கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இந்த கம்பிகளை வெளியில் பிரித்தெடுப்பதற்காக சுத்தியலும் கையுமாக 50க்கும் மேற்பட்டவர்கள், கட்டிட இடிபாடுகளை உடைத்து கொண்டிருக்கின்றனர். இரும்பு கிலோ ரூ10 முதல் ரூ15 வரை பழைய இரும்பு கடையில் எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த பணத்திற்கு ஆசைப்பட்டு சிலர் இடிபாடுகளுக்கு நடுவில் நெருக்கமான குகைபோன்ற பகுதிக்குள் புகுந்து கம்பிகளை பிரித்தெடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.சிறுவர் சிறுமியர், ஆண்கள், பெண்கள் உள்பட ஆபத்தை உணராமல் இந்த வேலையை செய்து வருகின்றனர். ஒப்பந்தம் எடுத்தவரும் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆபத்தை உணராமல் செய்யப்படும் இதுபோன்ற வேலையில் யாராவது இடிபாடுகளுக்குள் சிக்கி கொள்ள நேரிட்டு உயிர் பலியாவதற்கும் வாய்ப்புள்ளது.இதுகுறித்து அங்கு பொக்லைனை இயக்குபவர்கள் கூறும்போது, ‘‘விரைந்து செயல்பட்டு இடித்துத்தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் இருந்து வேகப்படுத்துகிறார்கள். இந்த கம்பியை பிரித்தெடுக்க ஒப்பந்ததாரர் தனியாக கூலிக்கு ஆள் வைக்க முடியாது. அது அவருக்கு நஷ்டம். அதனால் தான் கம்பிகளை உடைத்து எடுத்து சென்றால் அவருக்கு வேலை மிச்சம் என கருதுகிறார். இதனாலே பலரும் ஆபத்தான வகையில் கட்டிட இடிபாடுகளில் இரும்புகளை பிரித்தெடுத்து ருகின்றவர்’’ என்றனர்.

Related Stories: