பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றும் இடநெருக்கடியால் சிக்கி தவிக்கும் மாணவர்கள் புதிய கட்டிடம் திறக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

சாயல்குடி, பிப்.12:  சாயல்குடி அருகே குருவாடியில் போதிய வகுப்பறையின்றி மாணவர்கள் பரிதவித்து வரும் நிலையில், ஆறு மாதமாக புதிய கட்டிடம் திறக்கப்படாமல் இருப்பதால் பாழடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

கடலாடி ஒன்றியம், குருவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 55க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். அருகிலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை 300க்கும் மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர். குருவாடி, கொக்காடி, அவத்தாண்டை, எஸ்.எம்.இலந்தைகுளம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், அருகிலிருக்கும் தொடக்கப்பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இரு பள்ளி மாணவர்களுக்கும் போதிய வகுப்றை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். மரத்தடியில் பாடங்கள் நடந்து வருவதால், சாலையில் செல்லும் வாகனங்களால் பறந்து வரும் குப்பைகள், கால்நடைகளால் தொந்தரவு ஏற்பட்டு படிப்பதில் கவனம் சிதறுவதாக மாணவர்கள் கூறுகின்றனர். இந்த அவலநிலை கடந்த சில வருடங்களாக நீடித்து வருவதால், பெற்றோரின் கோரிக்கையையேற்று நபார்டு வங்கி உதவியுடன் சாயல்குடி, குருவாடி சாலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது, கட்டிடம் கட்டப்பட்டு, பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஆறு மாதங்களாகியும், பள்ளி கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. ஒதுங்குபுறத்தில் புதிய கட்டிடம் அமைந்துள்ளதால், சமூக விரோத கும்பல் கட்டிடத்தை சேதப்படுத்தி வருவதாக கூறுகின்றனர், இந்த உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். இடநெருக்கடியால் படிக்க முடியாமல் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது. எனவே விரைந்து புதிய பள்ளி கட்டிடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: