அரசு, தனியார் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு படை டிஐஜி காமினி தகவல்

பரமக்குடி, பிப்.12:  பரமக்குடியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழா கருத்தரங்கில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை கொண்டு சாலை பாதுகாப்பு படை உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறை, அரசு போக்குவரத்து கழகம், மோட்டார் வாகன போக்குவரத்து துறை மற்றும் அரசு சேதுபதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நுகர்வோர் மன்றம் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. டிஎஸ்பி சங்கர் வரவேற்றார். எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். முகாமின் நோக்கம் குறித்து முகாம் ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் எடுத்துரைத்தார். கருந்தரங்கிற்கு தலைமை வகித்து பேசிய ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி, சாலை பாதுகாப்பு மிக முக்கியமானது. சாலை விதிகளை முறையாக அறிந்து வைத்திருக்கவேண்டும். உங்கள் உயிரை பாதுகாக்க ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். வரும் கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு படை அவசியம் உருவாக்கப்படும் என்றார்.

கருத்தரங்கில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விதிகள், வாகன ஓட்டுனர் உரிமத்தின் அவசியம், வாகன விபத்து முதலுதவி, வாகன விபத்துக்கான காரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், டாக்டர் நாகநாதன், ராஜகோபால், முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்ளிடோர் பேசினர். விழாவினையொட்டி போலீசார், போக்குவரத்து ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், பள்ளி மாணவர்கள் என மொத்தம் 31 பேர் ரத்த தானம் செய்தனர்.

Related Stories: