நெடுஞ்சாலையில் எரிக்கப்படும் குப்பைகளால் விபத்து அபாயம்

ராமநாதபுரம், பிப்.12: தேவிபட்டினம் நெடுஞ்சாலையில் குப்பைகள் எரிக்கப்படுவதால் உண்டாகும் புகையால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் கிராம பகுதியில் சேரும் குப்பைகள் அனைத்தும் நெடுஞ்சாலை ஓரத்தில் வைத்து எரிக்கப்படுகின்றன. குப்பைகளில் இருந்து வரும் புகையால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு எதிரில் வரும் வாகனங்கள் தெரிவது கிடையாது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர குப்பைகள் எரிக்கப்படும் இடத்திற்கு அருகில் குடியிருப்பு வீடுகள் உள்ளது. குப்பைகள் எரிக்கப்படுவதால் உண்டாகும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதுதவிர அந்த சாலை வழியாக மாணவ, மாணவிகள் தினந்தோறும் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பைகளால் அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகளை எரிக்காமல் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த சந்திரன் கூறுகையில், சாலையோரத்தில் குப்பைகள் எரிக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினருக்கு பலமுறை தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுப்பது கிடையாது. வீடுகளில் சேரும் குப்பைகள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை எரித்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories: