மின் கம்பங்கள் ஏலம் விட்டதில் முறைகேடு

சிவகங்கை, பிப்.12: சிவகங்கை நகராட்சியில் ரயில்வே பாலம் அமைப்பதற்காக அகற்றப்பட்ட மின் கம்பங்கள் இரும்புக் கடையில் போடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை நகராட்சியில் தொண்டி சாலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆதம் பள்ளிவாசல் முதல் சிவகங்கை நகராட்சி அலுவலகம் வரை 10க்கும் மேற்பட்ட உயர் மின் கம்பங்கள் இரண்டு பக்கம் லைட் வசதியுடன்(சென்டர் மீடியா) சாலையின் நடுவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. பின்னர் சில மாதங்களிலேயே ரயில்வே பாலம் அமைப்பதற்காக இந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டன. இவைகள் மதுரை சாலையில் உள்ள நகராட்சி குடிநீர் தொட்டி உள்ள காம்பவுண்ட் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில் நகராட்சியில் பழைய இரும்புகள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலம் எடுத்தவரிடம் மின் கம்பங்கள் மற்றும் இரண்டு பக்கம் விளக்கு பொருத்தும் கம்பியையும் நகராட்சி அலுவலர்கள் விற்பனை செய்துள்ளனர். நல்ல நிலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த மின் கம்பங்களை பழைய இரும்புக்கு போடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சோனைமுத்து கூறியதாவது: மின் கம்பங்கள் அனைத்தும் சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு பின்னர் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பெங்களூரில் மட்டுமே தயார் செய்யப்பட்டு இந்த வகை மின் கம்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தரமான இந்த மின் கம்பங்களை மீண்டும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.ஒரு மின்கம்பத்தின் விலை அப்போதே ரூ.65 ஆயிரம் ஆகும். தற்போது 10 மின் கம்பங்கள் பழைய இரும்புக்கு போடப்பட்டுள்ளன. ஏலம் விடப்பட்ட 78 வகையான பொருட்கள் சேர்த்தே வெறும் ரூ.1லட்சத்து 75ஆயிரத்திற்கு தான் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 மின் கம்பங்கள் மட்டுமே ரூ.6 லட்சத்திற்கும் மேல் வரும். வெறும் பைப் என பெயர் போட்டு ஏலம் விட்டுள்ளனர். முறைகேடாக இதுபோல் செய்துள்ளனர். இதுகுறித்து கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: