அதிகாரிகள் அக்கறை காட்டாததால் சிதைந்து வரும் கண்மாய் மடைகள், கால்வாய்கள்

சிவகங்கை, பிப்.12: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய கண்மாய்களுக்கான மடைகள், சிறிய தடுப்பணைகள் பராமரிப்பில்லாத நிலையில் உள்ளதால், விவசாயம் பாதிப்படைந்து வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய கண்மாய்கள் 4ஆயிரத்து 871 உள்ளன. சுமார் 1லட்சத்து 5ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 904.7மி.மீ ஆகும். 2005 முதல் 2015ம் ஆண்டு வரை இடைப்பட்ட 10ஆண்டுகளில் அதிகபட்சமாக 2008ம் ஆண்டு 1283 மி.மீ மழை பெய்தது. 2009ம் ஆண்டு 772 மி.மீ, 2010ம் ஆண்டு 916மி.மீ, 2011ம் ஆண்டு 872மி.மீ, 2012ம் ஆண்டு 549மி.மீ, 2013ம் ஆண்டு 705மி.மீ மழை பெய்தது. 2014ம் ஆண்டு 920 மி.மீ மழை, 2015ம் ஆண்டில் 1097 மி.மீ மழை, 2016ம் ஆண்டு 706.5மி.மீ மழை பதிவானது. 2017ம் ஆண்டில் 976.6மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2018ம் ஆண்டில் 924.4மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆனால் அனைத்து ஆண்டுகளிலுமே தொடர்ச்சியாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் 10 சதவீதம் விவசாயம் மட்டுமே ஆற்றுப்பாசனம், கிணற்று பாசனத்தை நம்பி செய்யப்படுகிறது. எஞ்சிய 90 சதவீத விவசாயம் மழை நீரை நம்பி கண்மாய் பாசனம் மூலமே செய்யப்பட்டு வருகிறது. 25ஆண்டுகளுக்கு முன்பு வரை சரிவர பராமரிக்கப்பட்டு வந்த கால்வாய்கள், மடைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் பின்னர் போதிய பராமரிப்பின்றி போனது.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரும் கண்மாய் மடைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள், மடைகள், கால்வாய்கள் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன. பெரும்பாலான நீர்வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், மடைகள் என அனைத்துமே பராமரிப்பின்றி உள்ளன. நீர் வரத்து கால்வாய்கள், கால்வாய்கள் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் உள்ளிட்டவை சரியான முறையில் பராமரிக்கப்பட்டால் மட்டுமே கண்மாய்கள் காப்பாற்றப்படும்.இதுபோல் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மிக முக்கியமானாதாகும். இப்பகுதிகள் மூலமே கண்மாய்களில் சேர வேண்டிய முழுமையான நீர் கால்வாய் வழியாக சேரும். ஆனால் இவைகள் பராமரிப்பில்லாமல் இருப்பதால் கண்மாய்களுக்கு நீர் வரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.ஊராட்சி நிர்வாகம் மற்றும் விவசாயிகளின் முயற்சியால் கண்மாய்கள் மட்டும் நூறுநாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் தூர்வாரப்படுகிறது. ஆனால் கால்வாய்கள், மடைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் பராமரிப்பில்லாதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளால் கண்மாய்கள் தூர்வாரியும் பயனற்ற நிலை ஏற்படுகிறது. நீர் வரத்து வழியே உள்ள பாலங்கள், மடைகள் பல ஆண்டுகளாக கேட்பாரற்று இருப்பதால் ஆங்காங்கே நீர் தேங்கி கண்மாய்களுக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது

Related Stories: