₹1 கோடி செம்மரக்கட்டைகள் லாரியுடன் பறிமுதல் 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை காட்பாடி அருகே நடந்த வாகன சோதனையில்

கே.வி.குப்பம், பிப்.12:காட்பாடி அருகே நடந்த வாகன சோதனையில் லாரி மற்றும் வீட்டில் இருந்து ₹1 கோடி மதிப்புள்ள 5.5 டன் செம்மரக்கட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.வேலூர் மாவட்டம் காட்பாடி டிஎஸ்பி லோகநாதன் தலைமையில் லத்தேரி இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பைக்கில் வேகமாக வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் லத்தேரியை சேர்ந்த அமானுல்லா என தெரியவந்தது. அப்போது அமானுல்லாவை தொடர்ந்து பின்னால் வந்த லாரி போலீசாரை வேகமாக கடந்து சென்றது.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை பின்தொடர்ந்து சென்றனர். லாரியை நிறுத்துமாறு டிரைவருக்கு சிக்னல் செய்தனர். ஆனால் போலீசார் எச்சரிக்கையை மீறி லாரி டிரைவர் வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றார். அதைத்தொடர்ந்து, போலீசார் லாரியை விரட்டிச் சென்று மடக்கினர்.

போலீசார் சுற்றி வளைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உள்பட 4 பேர் கீழே குதித்து தப்ப முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் லாரியில் சோதனை செய்தனர். லாரியில் சுமார் 2 டன் செம்மரக்கட்டைகளை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து, செம்மரக்கட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக பிடிபட்ட அமானுல்லாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில், ‘ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் செம்மரக்கட்டைகளை தனது வீட்டில் பதுக்கி வைத்து புரோக்கர்களின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து டிஎஸ்பிக்கள் காட்பாடி லோகநாதன், குடியாத்தம் பிரகாஷ்பாபு மற்றும் போலீசார் அமானுல்லா வீட்டிற்கு சென்று அங்கு பதுக்கி வைத்திருந்த 3.5 டன் செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். வனத்துறையின் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் லாரியின் மொத்த மதிப்பு ₹1 கோடி என்று மதிப்பிடப்படுகிறது.இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிந்து அமானுல்லா உள்பட 5 பேரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: