கோர்ட்டில் கூச்சலிட்ட விவசாயி கைது வந்தவாசியில் விசாரணைக்கு இடையூறாக

வந்தவாசி, பிப்.8: வந்தவாசி கோர்ட்டில் விசாரணைக்கு இடையூறாக கூச்சல் போட்டுக் கொண்டிருந்த விவசாயியை, கோர்ட் உத்தரவுப்படி போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த முருக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன்(55), விவசாயி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் நடந்த திருவிழாவில் தகராறு செய்தது தொடர்பாக, கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வந்தவாசி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில் ஜானகிராமன் கலந்து கொள்ளாததால் மாஜிஸ்ட்ரேட் பிடிவாரன்ட் பிறப்பித்தார்.தொடர்ந்து, நேற்று முன்தினம் கையெழுத்து போட ஜானகிராமன் வந்தவாசி கோர்ட்டிற்கு வந்தார். வழக்கு விசாரணையால் மனவருத்தத்தில் இருந்த அவர், அங்கு கோர்ட் ஊழியரிடம் திடீரென கூச்சலிட்டார். அப்போது வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த மாஜிஸ்ட்ரேட் நிலவரசன், ஜானகிராமன் போட்ட கூச்சலால் அதிருப்தியடைந்தார்.

இதையடுத்து, கோர்ட்டில் கூச்சலிட்டு பணிக்கு இடையூறாக இருந்த அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கோர்ட் தலைமை எழுத்தர் மனோகரன் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிந்து ஜானகிராமனை கைது செய்தார். பின்னர், கோர்ட் உத்தரவுப்படி அவரை 15 நாள் சிறையில் அடைத்தார்.

Related Stories: