கட்டுக்கடங்காத கூட்டத்தால் போலீசார் தடியடி 51 காலி பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் குவிந்ததால் பரபரப்பு ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பம் விநியோகம்

வேலூர், பிப். 8: வேலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 51 பணியிடங்களுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.வேலூர் மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்றும், இன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. பணியில் சேர வயது வரம்பு 18 முதல் 50 வரையிலும், கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று எஸ்பி பிரவேஷ்குமார் அறிவித்திருந்தார்.அதன்படி, விண்ணப்பங்களை வாங்க வாணியம்பாடி, திருப்பத்தூர், அரக்கோணம் உட்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து நேற்று அதிகாலை 5 மணி முதலே ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் வரத்தொடங்கினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். இதனால் காலை 11 மணியளவில் அலுவலக வளாகம் முழுவதும் இளைஞர்கள் நிரம்பியிருந்த நிலையில் சாலையில் குவிந்திருந்தனர்.

விண்ணப்ப வினியோகத்தை காலை 11 மணியளவில் கலால் ஏடிஎஸ்பி ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார். அப்போது, விண்ணப்பத்தை பெற இளைஞர்கள் முண்டியடித்து சென்றனர். மேலும் சுற்றுச்சுவரை ஏறி குதித்து விண்ணப்பங்களை பெற முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பெரும்பாலான இளைஞர்களுக்கு கை, கால்களில் ரத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து, ஊர்க்காவல் படை அலுவலகத்தை பூட்டிவிட்டு அருகில் உள்ள நேதாஜி ஸ்டேடியத்திற்கு வந்து விண்ணப்பம்பெற கூறி அதிகாரிகள் அங்கு சென்றனர். பின்னர் முறையாக அனைவரையும் வரிசையில் அமரவைத்து விண்ணப்பங்களை ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், லட்சுமணன் ஆகியோர் வினியோகம் செய்தனர்.விண்ணப்ப வினியோகத்துக்கான முன்னேற்பாடுகளை உரிய முறையில் செய்திருந்தால் தள்ளுமுள்ளு மற்றும் போலீஸ் தடியடியை தவிர்த்திருக்கலாம் என்று அங்கு வந்திருந்த இளைஞர்கள் தெரிவித்தனர். ஊர்க்காவல்படை அலுவலகத்தில் நடந்த தள்ளுமுள்ளுவினால் கூட்டம் கலைந்த பின்னர் அந்த அலுவலகம் மற்றும் சாலைகள் முழுவதும் இளைஞர்களின் காலணிகள் சிதறி போர்க்கோலமாக காட்சியளித்தது.

Related Stories: