அம்மணி அம்மன் கோபுர கற்தூணில் விரிசல் நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்க முடிவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை, பிப்.7: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர பக்கவாட்டு தூணில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்கது. கற்கோயில் கட்டுமான நுட்பங்களுக்கும், உறுதிக்கும் இன்றளவும் சான்றாக அமைந்துள்ள கோயில்களில், அண்ணாமலையார் கோயில் முக்கிய இடம் பெற்றுள்ளது.கோயிலின் நான்கு திசைகளிலும் பிரதான கோபுரங்கள் மற்றும் உட்பிரகாரங்களில் அமைந்துள்ள 5 சிறிய கோபுரங்கள் உட்பட நவகோபுரங்களை கொண்ட சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு.இந்நிலையில் 171 அடி உயரம் உள்ள வடக்கு கோபுரம் எனப்படும் அம்மணி அம்மன் கோபுரத்தில் கொடிமங்கை சிலை அமைந்துள்ள பக்கவாட்டு கற்தூணில், லேசான விரிசல் இருப்பது கடந்த 2002ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக திருப்பணியின்போது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அதனை சீரமைத்தனர்.

இந்நிலையில், பக்கவாட்டு தூணில் ஏற்பட்டிருந்த விரிசல் தற்போது தெளிவாக வெளியில் தெரியும் வகையில் அதிகரித்துள்ளது. எனவே, இந்த விரிசலை சரி செய்யும் முயற்சியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. அதையொட்டி, அறநிலையத்துறை பொறியாளர் மற்றும் ஸ்தபதியை வரவழைத்து, நேரில் ஆய்வு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த 2017ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக திருப்பணியின்போது, ராஜகோபுர விதானத்தின் கற்தூணில் ஏற்பட்டிருந்த விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு, தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் சரி செய்யப்பட்டது. அதேமாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அம்மணி கோபுர பக்கவாட்டு தூணில் ஏற்பட்டுள்ள விரிசலையும் சரி செய்ய திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து, கோயில் இணை ஆணையர் ஞானசேகர் கூறுகையில், அம்மணி அம்மன் கோபுர பக்கவாட்டு தூணில் உள்ள சிறு விரிசல் கடந்த 2002ம் ஆண்டு கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டது. இதனால், கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும், இதனை நிரந்தரமாகவும், முழுமையாகவும் சரி செய்யும் நடவடிக்கையை கோயில் நிர்வாகம் மேற்கொள்ளும்'' என்றார்.

Related Stories: