பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் தர்ணா கலசபாக்கம் அருகே பரபரப்பு தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு

கலசபாக்கம், பிப்.7: கலசபாக்கம் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜாக்டோ- ஜியோ சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தமிழக அரசு, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஆசிரியர்கள் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், கார்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் என்பவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் அன்பழகனை, வேடந்தவாடி அரசு தொடக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், தங்களது தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த மாணவர்களின் பெற்றோரும் பள்ளியில் அங்கு திரண்டனர். தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அருட்செல்வன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேன்மொழி ஆகியோர், பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.அப்போது மாணவர்கள், பெற்றோர்கள் ‘தலைமை ஆசிரியர் அன்பழகன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார். அவர் வந்த பிறகுதான் பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனவே, அவரை மீண்டும் இந்த பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், மாணவர்கள் தர்ணாவை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.

Related Stories: