சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறப்பு திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டுக்கு

திருவண்ணாமலை, பிப்.6: திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிக்கு, சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி வீதம் தென்பெண்ணை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 88 ஏரிகளுக்கு, கடந்த 23ம் தேதி முதல் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது,சாத்தனூர் அணையின் நீர்மட்டம், கடந்த 23ம் தேதி நிலவரப்படி மொத்த உயரமான 119 அடியில், 96.30 அடியும், மொத்த நீர் கொள்ளளவான 7,321 மில்லியன் கன அடியில், 3235 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருப்பு இருந்தது.எனவே, சாத்தனூர் அணை குடிநீர் திட்டங்கள், அணை பராமரிப்பு, நீர் ஆவியாதல், மண் தூர்வினால் ஏற்பட்டுள்ள நீர் இழப்பு போன்றவற்றை கணக்கிட்டு, மீதமுள்ள தண்ணீர் மட்டும் தற்போது பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது,அதன்படி, சாத்தனூர் அணையில் வலதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடியும், இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 200 கன அடியும் கடந்த 6 நாட்களாக தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. அதனால், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை தாலுகாக்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதியில் 2,500 ஏக்கர் பாசனம் பெறும் வகையில், ஏற்கனவே போடப்பட்ட நீர் பகிர்மான ஒப்பந்தத்தின்படி, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.அதன்படி, சாத்தனூர் அணையில் தற்போது திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டுக்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி வரை முதற்கட்டமாக திறக்க உள்ளனர். தென்பெண்ணை ஆற்றின் வழியாக தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும், ஏற்கனவே ஏரிகளுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் வலதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடியும், இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது அணையில் இருந்து வினாடிக்கு மொத்தம் 950 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அதனால், அணையின் நீர்மட்டம் தற்போது 91.05 அடியாகவும், நீர் கொள்ளளவு 2,571 மில்லியன் கன அடியாகவும் குறைந்திருக்கிறது.

Related Stories: