₹25 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டை பறிமுதல் காரில் துரத்திச் சென்று வனத்துறையினர் அதிரடி குடியாத்தம் அருகே பரபரப்பு

வேலூர், பிப்.5: குடியாத்தம் அருகே நேற்று காலை காரில் கடத்திய ₹25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை, வனத்துறையினர் காரில் துரத்திச்சென்று பறிமுதல் செய்தனர். மேலும், ப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல் வனப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை தமிழக-ஆந்திர எல்லையோரம் குடியாத்தம் சைனகுண்டா வனப்பகுதி சோதனைச்சாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணியளவில் ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி சென்னை பதிவு எண் கொண்ட ஒரு கார் வேகமாக வந்தது. வனத்துறையினரை பார்த்ததும், அந்த கார் சோதனைச்சாவடி தடுப்புகளை உடைத்துக்கொண்டு நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் அந்த காரை தங்களின் வாகனங்களில் விரட்டி சென்றனர்.

மேலும், அவ்வழியாக உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றொரு காரில், மோடிகுப்பம் அருகே காரை தடுக்க தங்களின் காரை சாலையில் குறுக்கே நிறுத்தினர். மேலும் அவ்வழியாக வந்த வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.இதைபார்த்த மர்ம ஆசாமிகள் மோடிகுப்பம் அருகே காரை பள்ளத்தில் இறக்கிவிட்டு, காரில் இருந்து இறங்கிய 2 பேர் தப்பியோடினர். அப்போது அவர்களை வனத்துறையினர் துரத்திச்சென்றனர். ஆனால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து காரை சோதனையிட்டபோது, அதில் 1 டன் எடை கொண்ட 33 செம்மரக்கட்டைகள் இருந்தது. இவற்றின் மதிப்பு ₹25 லட்சம் ஆகும்.

இதையடுத்து, குடியாத்தம் வனத்துறை அலுவலகத்திற்கு காருடன் செம்மரக்கட்டைகளை கொண்டு சென்றனர். தொடர்ந்து, செம்மரக்கட்டை எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது. எங்கு கொண்டு செல்லப்படுகிறது என வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: