போச்சம்பள்ளி அருகே அவலம் மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள்

போச்சம்பள்ளி, ஜன.22:  போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளியில் போதிய வகுப்பறை வசதியின்றி மாணவ, மாணவிகள் மரத்தடியில் உட்கார்ந்து பாடம் படிக்கும் அவலநிலை காணப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது தேவீரஅள்ளி கிராமம். இங்குள்ள அரசு பள்ளி கடந்த 1954ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. மாணர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் நடுநிலைப்பள்ளியாகவும், கடந்த 2017ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், உயர்நிலைப் பள்ளிக்கென கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படவில்லை. தொடக்க, நடுநிலைப்பள்ளி வகுப்பறைகளில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி பயிலும் நிலையுள்ளது. போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழல், திறந்தவெளி மைதானத்தில் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சுமார் 3 கி.மீ. தூரம் முதல் 5 கி.மீ. தூரம் வரை நடந்தே வருகிறார்கள். அப்படி ஆர்வத்துடன் நடந்து வந்து படிக்கும் மாணவர்களின் நலன் கருதி புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும். இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அரசு பள்ளிகளை முன்னிலைபடுத்த எடுத்துவரும் நடவடிக்கையால் புது மாணவர்கள் பள்ளிக்கு படையடுத்து வரும் நிலையில், தேவீரஅள்ளி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் இல்லாதது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மாணவர்கள் காலையிலேயே பள்ளிக்கு புறப்பட்டு வந்து விடுகின்றனர். ஆனால், போதிய வகுப்பறை வசதியின்றி பள்ளி வளாகத்தில் தரையிலோ அல்லது மரத்தடி நிழலிலோ உட்கார்ந்து படிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிட வசதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: