மூணாறில் கொச்சி- தனுஷ்கோடி சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மெகாபள்ளம் முத்திரைப்புழை ஆற்றில் விழும் அச்சத்தில் வாகன ஓட்டுனர்கள்

மூணாறு, ஜன.22:  மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பழைய மூணாறு செல்லும் சாலையில் உள்ள பள்ளங்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மூணாறில் இருந்து பழையமூணாறு செல்லும் சாலை கடந்த ஆண்டு ஏற்பட்ட கனமழை காரணமாக முற்றிலும் சேதமடைந்தது. இதனால் குண்டும், குழியுமாக சாலை மாறியது.  கனமழை ஓய்ந்து மூணாறு இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் இந்த பாதைகளை சீரமைக்கவும், சாலைகளை விரிவாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இந்நிலையில் சேதமடைந்த இந்த சாலைகளை 100 மீட்டர் அளவு விரிவாக்கப்பட்டு மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. சாலை பணிகள் நிறைவடைந்து சில நாட்களேயான  நிலையில் மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ள பகுதியில் மிக பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளது.  சேதம் அடைந்த இந்த பகுதி முத்திரைப்புழை ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ளதால், வாகன ஓட்டுனர்கள் கவனம் சிறிது தவறினாலும் வாகனங்கள் 25 அடி ஆழத்தில் முத்திரைப்புழை ஆற்றுக்குள்  விழும் அபாயநிலை உள்ளது.

மேலும் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை என்பதால் கேரளா மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்களான அடிமலி, எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு  தினந்தோறும் 1000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மற்றும் பஸ்கள்  இவ்வழியாகத்தான் கடந்து செல்கின்றன. இவ்வாறு செல்லும் வாகனங்கள் சாலையில் ஏற்பட்டுள்ள இந்த பள்ளம் காரணமாக எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட மிகவும் சிரமம் அடைகின்றன. ஒவ்வொரு நாளும் பயத்துடன் இந்த சாலயயை கடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது .

சாலையின் இந்த நிலையை குறித்து மூணாறு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் மின் விளக்குகள் இப்பகுதியில் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் இந்த சாலையை கடந்து செல்கின்றனர் .

இதுகுறித்து சிந்தா மெய்தீன்  கூறுகையில்,`` ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய சாலையில் இந்த பள்ளங்கள் உள்ளன. இந்த பகுதியில் எதிரே வாகனங்கள் வரும் போது சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு கூட இடம் கிடையாது. மேலும் சற்றுகால் இடறினாலும் முத்திரைப்புழை ஆற்றில் விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே,ய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த சாலைகளை சீரமைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories: