உத்தமபாளையம் வனச்சரகத்தில் கோடை காலத்திற்கு முன்பே தேவை தண்ணீர்தொட்டி

தேவாரம், ஜன.22: உத்தமபாளையம் வனச்சரகத்தில் வனவிலங்குகளுக்கு கோடைக்காலம் தொடங்கும் முன்பே காடுகளை ஒட்டி தண்ணீர்தொட்டிகள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். உத்தமபாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட  கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி,  மலையடிவாரத்தை ஒட்டிய வனப்பகுதிகளில் அதிக அளவில் காட்டுப்பன்றி, யானைகள், மான்கள் உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள்  வாழ்கின்றன. இங்குள்ள  ராமக்கல்மெட்டு, சதுரங்கபாறை, அரிவாள்தீட்டிப்பாறை,  வனப்பகுதிகளை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகள் காட்டுப்பன்றிகளுக்கு தேவையான உணவுகளை அதிகம் தருகிறது. கோம்பை மலையடிவாரத்தை ஒட்டி விவசாயிகள் அதிக அளவில் எள், தக்காளி, அவரை உள்ளிட்ட மானாவரி பயிர்களை விதைக்கின்றனர். கடந்த 3 மாதத்திற்கும் மேலாக மழை இல்லை. வடகிழக்கு பருவமழை ஏமாற்றி விட்டதால் வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படும் அபாயநிலை நிலவுகிறது.குறிப்பாக, ஏப்ரல் மாதம் அதிகமான வறட்சி நிலவக்கூடிய நிலை உள்ளது.    

வனப்பகுதிகளில் இருந்து தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் காட்டுப்பன்றிகள் தோட்ட நிலங்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, கோம்பை கருக்கோடையில் அதிகமான அளவில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக படையெடுக்கின்றன. தோட்டங்களுக்கு வரக்கூடிய  காட்டுப்பன்றிகளுக்கு உரிய பாதுகாப்பும் இல்லாத நிலையில், அதை வேட்டையாடி கறியை 1 கிலோ ரூ.200 முதல் 300 வரை விற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளது. எனவே, வனவிலங்கைப்  பாதுகாத்திட தேவையான நடவடிக்கையை உத்தமபாளையம் வனத்துறை அதிகாரிகள் எடுக்கவேண்டும். குறிப்பாக மழை அல்லாத காலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் தண்ணீர் தொட்டிகளை கட்டித்தர வனத்துறையினர் முன்வரவேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள்  கூறுகையில், `` ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலமாக இருக்கும். எனவே, இந்த மாதங்களில் அதிகமான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிட வாய்ப்புகள் உள்ளன. மரங்கள், இலைகள் கருகிவிடும். தண்ணீர் ஊற்றுக்கள் இல்லாதநிலையில் தவியாய் தவிக்ககூடிய வனவிலங்குகளுக்கு வசதியாக இப்போதே அதற்கான எஸ்டிமேட் தயார் செய்து தண்ணீர் தொட்டிகள் கட்டப்படவேண்டும்’’  என்றனர்.

Related Stories: