திருச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களிடம் கட்டாய வசூல் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி, ஜன. 22:  திருச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் உறவினர்களிடம் ஒப்பந்த பணியாளர்கள் கட்டாய பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதால் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இயங்கி வருகிறது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தீவிர சிசு மற்றும் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர்.

தற்போது அரசு மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக கடந்த சில ஆண்டுக்கு முன் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் செக்யூரிட்டி, கிளீனிங், வார்டு கிளீனிங், சூபர்வைசர், துப்புரவு பணியாளர் என 300க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்துவருகின்றனர்.

இதில், மகப்பேறு பிரிவி–்ல் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மகப்பேறு வார்டில் பிரசவசத்திற்காக பெண்களின் உறவினர் மற்றும் கணவரிடம் வீல் சேரில் கொண்டு செல்ல ரூ.100, வார்டில் இருந்து பிரசவ வார்டுக்கு கொண்டு செல்ல ரூ.500, பிரசவம் பார்த்த பின் மீண்டும் வார்டுக்கு கொண்டு செல்ல ரூ.200 என வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வார்டில் தினமும் பணி மாறுவோருக்கு டீ குடிக்க ரூ.50 என கட்டாய வசூல் நடக்கிறது. வேறு வழியின்றி அவர்கள் கேட்கும் தொகையை மனவேதனையுடன் கொடுத்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு மருத்துவமனையை நாடி வருபவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களே அதிகம்.  அவர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களை கண்டறிந்து அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோல் கட்டாய வசூலில் ஈடுபட்டதாக அண்மையில் சேலம் அரசு மருத்துவமனையில் 4 ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: