மேலவாளாடி- புதுக்குடி இடையே சுரங்கப்பாதை பணியை தவிர்த்து மாற்றுபாதை - மக்கள் கோரிக்கை

லால்குடி, ஜன. 22:  லால்குடி மேலவாளாடி- புதுக்குடி ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை கைவிட்டு மாற்றுபாதை அமைக்க வேண்டும் என்று திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை விடுத்தனர்.லால்குடி தொகுதி தாளக்குடி, அப்பாதுறை , எசனைகோரை, புதுக்குடி ஆகிய கிராமங்களில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் துரைகந்தசாமி, ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன்  முன்னிலை வகித்தனர்.

இதில் அப்பாதுறையில் நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு அப்பாதுறை ஊராட்சியிலிருந்து புதுக்குடி ஊராட்சிக்கு ரயில்வே சுரங்கபாதை அமைப்பதை தவிர்த்து மாற்றுபாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். மகளிருக்கென சுகாதார பொது கழிப்பிடம் கட்டித்தர வேண்டும். ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ்பகுதியில் மாட்டு வண்டிகளை கட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டுவதை அகற்றி தர வேண்டும்.  பொதுமக்கள் பயன்படும் வகையில் சமுதாயகூடம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: அதிமுக ஆட்சியில்  மூன்றுமுறை மேட்டூர் அணை நிரம்பி திறந்து விட்டபோதிலும் கடைமடை விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் தராமல் வீணாக கடலுக்கு சென்றது. அதிமுக அரசு பொதுமக்களுக்கு தேவையான பயனுள்ள திட்டங்களை செய்யவில்லை. திமுக ஆட்சி வந்தவுடன் கொள்ளிடத்தில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீரை சேமிக்க வழிவகை செய்யப்படும். மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற திமுகவிற்கு பொதுமக்கள் ஆதரவுதர வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில்  தலைமை செயற்குழு உறுப்பினர் வைரமணி, ஊராட்சி செயலாளர்கள் வெங்கடேசன், குருசாமி, ராமச்சந்திரன், மன்னர் மன்னன், சண்முகநாதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரணிதரன் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: