விவசாயிகள் வலியுறுத்தல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படும் அபாயம்

சிவகங்கை, ஜன. 22: சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர், அரசு ஊழியர் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ, ஜியோ) சார்பில் இன்று முதல் நடக்க உள்ள வேலை நிறுத்தத்தால், அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணிகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்தும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது.

பல்வேறு போராட்டங்கள், நீதிமன்ற உத்தரவு என அனைத்திற்கு பின்னரும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்க உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் அங்கன்வாடி, வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதனால் அரசு அலுவலகங்கள் எவ்வித பணிகளும் நடக்காமல் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் இதில் பங்கேற்பதால் பள்ளிகள் நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது. சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் பள்ளிகளில் சத்துணவு வழங்குவது பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து ஜாக்டோ, ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: இன்றைய போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளோம். பல்வேறு போராட்டங்களுக்கு பின்னரும் தமிழக அரசு நடவடிக்கை இல்லாமல் மவுனம் காத்து, அரசே எங்களை போராட்டக்களத்திற்கு தள்ளியுள்ளது. அரசு சார்பில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும். இன்று தாலுகா தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம், ஜன.25ல் சிவகங்கையில் மறியல் நடைபெற உள்ளது’ என்றனர்.

Related Stories: