போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பொதுஅறிவு வளர நாளிதழ் படியுங்கள்

காரைக்குடி, ஜன.22: போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள நாளிதழ் படிப்பதன் மூலம் தான் பொது அறிவை வளர்த்துக் கொண்டு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார். காரைக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘தலை நிமிரும் எதிர் காலம்’ என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. அய்யப்பா சுந்தரேசன் வரவேற்றார். கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கி வைத்து பேசுகையில்,

திட்டமிட்டு படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்ன படிக்க வேண்டும். எப்படி படிக்க வேண்டும் என புரிந்து படித்தால் உங்கள் கனவு நினைவாகும். கற்ற கல்வி சமுதாயத்திற்கு பயனாக இருக்க வேண்டும். அனைத்து பாடங்களிலும் சிறந்து விளங்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்க வேண்டும். புரிந்து படித்தால் வெற்றி நிச்சயம்.

கல்வியால் மட்டுமே நமது பொருளாதார நிலை உயரும். ஆழ்ந்து படிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நன்றாக படித்தால் தான் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள முடியும். அதில் வெற்றி பெற்று அரசு பதவிகளை பெறலாம். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்துகின்றன. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தினசரி நாளிதழ்களை படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டி தேர்வுகள் அனைத்து நேர்மையான முறையிலேயே நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படுகின்றனர். பணிக்கு வருபவர்கள் பணிக்கு சென்ற பின்பும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்றார். இதில் டிஎஸ்பி அருண், அய்யப்பா மணிகண்டன், பிரபாகரன், தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, தாசில்தார் மகேஸ்வரன், தலைமை ஆசிரியர்கள் பீட்டர்ராஜா, பாஸ்கர், ராஜபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.

Related Stories: