ரோந்து பணியில் மந்தம் கஞ்சா,மது விற்பனை ஜோர்

சாயல்குடி, ஜன.22:  கடலாடியில் கஞ்சா, மது விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து வருவதால் பெற்றோர் பீதியில் உள்ளனர். கடலாடி தாலுகா தலைநகரமாக இருப்பதால், அனைத்து பயன்பாட்டிற்கும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வந்து செல்கின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடலாடி காவல்நிலையம் எதிரிலுள்ள கோயில் பகுதி, கடலாடி அரசு கல்லூரி அருகேயுள்ள காட்டு பகுதிகளில் கஞ்சா விற்பனையும் ஒழிவு மறைவின்றி ஜோராக நடந்து வருகிறது. மதுரை, தேனி போன்ற பிற மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வரும் வியாபாரிகள், இப்பகுதி சிறு வியாபாரிகளிடம் விற்கின்றனர்.

போன் செய்தால் கஷ்டமரை தேடி சென்று விற்கின்றனர். குறைந்த விலைக்கு அதிகமான போதை தரும் போதை வஸ்து என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா போதை தலைக்கேறி செய்வதறியாத நிலைக்கு தள்ளப்படுவதால் குற்றச்சம்பவங்கள் கடலாடி பகுதியில் அடிக்கடி நடந்து வருவதால், பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். சில கிராமங்களில் குடிசை தொழில் போன்று கள்ள மார்க்கெட்டில் மது விற்பனையும் கனஜோராக நடந்து வருகிறது.

கடலாடி காவல்நிலைய போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்லாமல் இருப்பதால், சமூக விரோத செயல்கள் அதிகமாகி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா, முதுகுளத்தூர் டி.எஸ்.பி ராஜேஷ் உள்ளிட்டோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: