அமமுக ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவுநாள் அரசு விழாவாக அறிவிக்கப்படும் பரமக்குடியில் டிடிவி தினகரன் பேச்சு

பரமக்குடி, ஜன.22: பரமக்குடி தொகுதியில் மக்கள் புரட்சி சந்திப்பு இரண்டாம் நாள் பயணத்தை தொடங்கிய டிடிவி தினகரன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவுநாள் அரசு விழாவாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். பரமக்குடி தொகுதியில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரண்டாம் நாள் பயணத்தை தொடங்கினார். பார்த்திபனூரில் அனைத்து சமுதாய தலைவர்களை சந்தித்து, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக.வுக்கு ஆதரவு தரவேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து கிழப்பெருக்கரை, கமுதக்குடி, பொன்னையாபுரம், அரியனேந்தல், பொட்டிதட்டி, போகலூர், நயினார்கோவில் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசுகையில், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். தென்மாவட்டங்கள் சிறப்புடன் திகழவேண்டும். ஏழைகள், விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் நலன் காக்காமலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாங்கி தரவேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. 33 அமைச்சர்கள் தான் நன்றாக வாழ்கின்றனர். அமமுக அனைத்து மதம் மற்றம் சமுதாயத்திற்கும் சமமான கட்சி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை சொல்லி இந்த அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தில் மக்கள் ஆட்சி மலரவேண்டும்.

அமமுக ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்போம் என தெரிவித்தார். பொன்னையாபுரத்தில் டிடிவி.தினகரனுக்கு திரளான பெண்கள் மலர் தூவி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், மாநில மருத்துவ அணி செயலாளர் முத்தையா, ஜெயலலிதா பேரவை மாரியப்பன் கென்னடி, அமைப்பு செயலாளர்கள் வது.நடராஜன், முனியசாமி, மகளிரணி இணைச்செயலாளர் கவிதா சசிக்குமார், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நயினார்கோவில் சிவக்குமார், பரமக்குடி நகர் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: