தமிழக அரசின் வனச்சட்டத்தால் கூடலூர், பந்தலூர் செக்ஷன் 17 நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது

ஊட்டி, ஜன. 22: தமிழக அரசு கொண்டு வரும் வன சட்ட திருத்தால் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் வசிக்கும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள செக்ஷன் பிரிவு 17 நிலங்களில் நீண்டகாலமாக விவசாயிகள் பயிர் செய்தும், வாழ்ந்தும் வருகின்றனர். 1969ம் ஆண்டு ஜென்மம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நிலம்பூர் கோவிலகத்திடமிருந்து, 80 ஆயிரத்து 88 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அதில், 19 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலங்களில் வசிப்போருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த ஒரு சலுகைகளும், அரசின் நலத்திட்ட உதவிகள் ேபான்றவைகள் பெற முடிவதில்லை. மேலும், தங்கள் பயன்படுத்தி வரும் நிலங்களை பத்திரம் பதிவு செய்துக் கொள்ளவும் முடிவதில்லை.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடந்த பல ஆண்டகளாக பட்டா வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற நிலப்பட்டா வழங்கப்படாத நிலையில், சமீபத்தில் தமிழக அரசு செக்ஷன் 17 நிலங்கள் முழுவதையும் வனத்துறைக்கு வகை மாற்றம் செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தத்தை சட்ட மன்றத்தில் கொண்டு வந்தது. கடந்த ஜனவரி 8ம் தேதி இதற்காக சட்டம் நிறைவேற்றப்பட்டது.  தமிழக அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்தால் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும், இந்த நடவடிக்கை மக்களின் மீது தொடுத்துள்ள நேரடியான தாக்குதல் என பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சியினரும் தெரிவித்தனர். இந்நிலையில், வன சட்ட திருத்தத்தால் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

என்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நேற்று அவர் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஜென்மம் நிலங்கள் பிரிவு 17 மற்றும் பிரிவு 53 என இரு வகை நிலங்கள் உள்ளன. இதில், மக்கள் பிரிவு 17 நிலங்களில் குடியிருந்து வருகின்றனர். பிரிவு 53 நிலங்கள் முழுவதும் வனத்துறையினர் கட்டுபாட்டில் உள்ளது. தற்போதைய சட்ட திருத்தம்படி வனமாக உள்ள பிரிவு 53 நிலங்கள் மட்டுமே தொழில்நுட்ப காரணங்களாக பிரிவு 16 ஆக மாற்றப்பட்டுள்ளன. இதனால், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

Related Stories: