பவானிசாகர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

சத்தியமங்கலம், ஜன.22: பவானிசாகரை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் விவசாயி நந்தகுமார்(45). இவர் தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். வாழை மரங்கள் குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இக்கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறும் ஒற்றையானை தினமும் பெரியார் நகர் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணிக்கு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை நந்தகுமாரின் தோட்டத்தில் புகுந்து தேன்வாழை மரங்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. யானைகள் வாழைமரங்களை சேதப்படுத்தும் சத்தம் கேட்ட விவசாயிகள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினரும், விவசாயிகளும் ஒற்றை யானையை பட்டாசு வெடித்து விரட்ட முயற்சித்தபோதும் யானை வாழைத்தோட்டத்தை விட்டு நகராமல் அடம் பிடித்தது. ஒருகட்டத்தில் வனத்துறை ஊழியர்களை யானை விரட்டியது. அப்போது யானையிடமிருந்து தப்பிக்க ஓடியபோது வனவர் வடிவேல் தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  இதையடுத்து வனவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தினமும் யானை அட்டகாசம் செய்து வருவதால் பெரியார்நகர் பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: