போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள் மாற்றி அமைக்க கோரிக்கை

காரியாபட்டி, ஜன. 22: காரியாபட்டி 12வது வார்டில் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரியாபட்டி பேரூராட்சி 12வது வார்டில் பாண்டியன் நகர் உள்ளது. மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலை அருகே, அமைந்துள்ள இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இங்குள்ள தாமரைத்தெரு, ரோஜா தெரு,பள்ளத்துப்பட்டி உட்பட பல தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், தெருக்களில் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர முடியவில்லை. கார்களை வைத்திருப்போர் மெயின் ரோட்டில் நிறுத்தும் நிலை உள்ளது. எனவே, எனவே பொதுமக்களின் நலன் கருதி மின்வாரிய அதிகாரிகள் டிரான்பார்மரையும், மின்கம்பங்களையும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சரத்ஆறுமுகம் கூறுகையில், ‘12வது வார்டில் பல தெருக்களின் நடுவில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அவசர காலங்களில் ஆட்டோக்கள் வரமுடியவில்லை. வீட்டுக்கு செல்லும் வழியில் பாதையை மறித்து மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. வளர்ந்து வரும் இப்பகுதியில் தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.பி.எம் அழகர்சாமி கூறுகையில், ‘12வது வார்டில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களால் வாகனங்களை வீட்டுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் செய்ய முடியவில்லை. மின்கம்பத்தை மாற்றி அமைக்க பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. 12வது வார்டில் பொதுமக்களுக்கு இடையூறான மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: