ஓட்டேரியில் அடுத்தடுத்துள்ள டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்கள் ஆவேசம் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி, ஜன. 22:ஓட்டேரியில் அடுத்தடுத்துள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் ஆவேசத்துடன் புகார் கூறினர். நடவடிக்கை எடுக்க எம்எல்ஏவிடம் வலியுறுத்தியதால் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கம், வண்டலூர், நெடுங்குன்றம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இதில் மண்ணிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.லோகநாதன், வண்டலூர் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆராவமுதன், நெடுங்குன்றம் ஊராட்சி முன்னாள் தலைவர் சோ.ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.  இதில் மகளிர் சுயஉதவிகுழுவினர், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள்,  சாலை, குடிநீர், தெருவிளக்கு, பஸ் வசதி, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மனுக்களை கொடுத்தனர். இதில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஊராட்சி செயலாளர்கள் அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் புகார் கூறினர்.

இதில் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரியில் ரயில்வே தண்டவாளம் ஒட்டியபடி அடுத்தடுத்து 5 டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ளதால் சாலையில் நடமாட முடியாமல் பெண்கள் அச்சப்படுவதாகவும்,  குடிபோதையில் பெண்களை கலாட்டா செய்வதாகவும், பெண்களிடம் அடிக்கடி செயின் பறிப்பு, வழிப்பறியில் ஈடுபடுவதாகவும், எனவே இப்பகுதியகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசமாக கூறியதால் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், முக்கிய நிர்வாகிகள் தேவேந்திரன், பாண்டுரங்கன், எம்.டி.சண்முகம், மஞ்சுளாபொன்னுசாமி, ஜெ.ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: