10 ரூபாய் நாணயம் செல்லுபடியாகும் வதந்திகளை நம்பவேண்டாம்

காஞ்சிபுரம், ஜன.22: பத்து ரூபாய் நாணயம் செல்லுபடியாகும், இதுகுறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:  சமீப காலமாக பேருந்துகளிலும், கடைகளிலும், பல வர்த்தக நிறுவனகளிலும், சில வங்கிகளிலும் பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்களிடமிருந்து வாங்க மறுப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு மற்றும்  பல சமயங்களில் பல்வேறு ஊடகங்களின் மூலமாக பத்து ரூபாய் நாணயம் செல்லுபடியாகும் என பொதுமக்களுக்கும் அந்த நாணயங்களை பொதுமக்களிடமிருந்து அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

ஆயினும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்கின்ற  சிலரின் நடவடிக்கையினால் அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் செலுத்தப்பட்ட நாணயங்களும் வங்கிகளில் பொதுமக்கள் வாங்க மறுப்பதால்  இருப்பு வைக்கப்பட்டு பொது பயன்பாட்டிற்கு விநியோகிக்க முடியாமல் உள்ளது. எனவே, பத்து ரூபாய் நாணயமானது சட்டப்படி செல்லுபடியாகின்ற ஒரு பணம் என்பதால் பொது மக்கள், வர்த்தகர்கள், வங்கிகள், பேருந்து நடத்துனர்கள் அனைவரும் பத்து ரூபாய் நாணயங்களை ஏற்றுக் கொள்ளுமாறும், பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்கின்ற வதந்தியை நம்பவேண்டாம் எனவும் கலெக்டர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: