செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவன் பரிதாப சாவு

குன்றத்தூர், ஜன.22:  குன்றத்தூர் அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று நண்பர்களுடன் ஜாலியாக குளித்த கல்லூரி மாணவர் நீரில்  மூழ்கி  பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, தண்டையார்பேட்டை, ராஜகோபாலன் நகர் 5- வது தெருவை சேர்ந்தவர் குமாரவேல் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு குமாரவேல் தனது நண்பர்கள் 15  பேருடன் சேர்ந்து குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு நண்பர்கள் அனைவரும் குன்றத்தூர் அருகே உள்ள  செம்பரம்பாக்கம் ஏரி பகுதிக்கு வந்தனர்.

அங்கு ஏரியை சுற்றிப் பார்த்த நண்பர்கள் அனைவரும், பின்னர் ஏரியில் தண்ணீர் நிரம்பி இருப்பதைக் கண்டு, ஆர்வ மிகுதியில் ஏரியின் ஐந்தாம் கண் மதகு எனப்படும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நண்பர்கள் அனைவரும் கரையோரம் நின்று குளிக்கையில், குமாரவேல் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தார். இதில் நீச்சல் தெரியாமல் குமாரவேல் தண்ணீரில் தத்தளித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குமாரவேலுவின்  மற்ற நண்பர்கள் காப்பாற்றுமாறு  குரல் எழுப்பினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு  தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், செம்பரம்பாக்கம் ஏரியில் இறங்கி கல்லூரி மாணவர் குமாரவேலுவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.  சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின்னர், குமாரவேலு  உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் உடலைக் கைப்பற்றிய குன்றத்தூர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, குமாரவேல் நிஜமாகவே நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீப காலமாக செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் வயதினர் அதிக அளவில் இறப்பதால், அரசு உடனடியாக தலையிட்டு பெருகி வரும் இறப்பினை தடுக்கும் வகையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: