மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் தைப்பூச விழா

மதுராந்தகம், ஜன. 22:  மேல்மருவத்தூரில் தைப்பூச விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. 8.30  மணி அளவில் ஆலய வளாகம் வந்த பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூஜை செய்து சிறப்பான வரவேற்பளித்தனர் இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.

 நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்ற அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவர் தேவி ரமேஷ் தொடங்கி வைத்தார். மாலை 4.30 மணி அளவில் தைப்பூச ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி மங்கள இசையுடன் தொடங்கியது. ஜோதியை ஏற்றுவதற்கு முன்பு குருஜோதி ஏற்றும் நிகழ்ச்சி ஆன்மிக குரு பங்காரு அடிகளார் இல்லத்தின் முன்பு நடைபெற்றது. பின்னர் கோ பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து ஜோதியை லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றிவைக்க 5 பெண்கள் அந்த ஜோதியை வேப்பிலை சங்கிலிகளால் இணைத்து எடுத்து வந்தனர் மாலை சுமார் 5 மணி அளவில் ஆன்மிக இல்லத்திலிருந்து துவங்கிய குரு ஜோதி ஊர்வலத்தை  ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர்கள் கோ. ப. அன்பழகன் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தேவராட்டம் நடனமாடும் குதிரை ஒயிலாட்டம் பேண்டு வாத்தியங்கள் கிராமிய கலை பொய்க்கால் குதிரை நையாண்டி மேளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன . மாலை 6 மணி அளவில் பங்காரு அடிகளார் தைப்பூச ஜோதியை ஏற்றி வைத்தார்.

 இந்த விழாவில் அருள்மொழி ஐஏஎஸ் ஈரோடு கலெக்டர் கதிரவன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் முருகேசன் ராஜேஸ்வரன் அரசு சிறப்பு திட்டங்கள் இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி முதல் தினந்தோறும் சக்திமாலை அணிந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Related Stories: