மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையில் பக்தர்கள் கிரிவலம் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

மதுராந்தகம், ஜன.22: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையில் நேற்று கிரிவல நிகழ்ச்சி நடந்தது. இதில், சுமார் 5 ஆயிரம் பேர்கள் கலந்துகொண்டனர். மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ளது வஜ்ரகிரி மலை. இந்த மலையின் மீது பசுபதி ஈஸ்வரர், வஜ்ரகிரி வடிவேலன் ஆகிய ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் இந்த மலையைச் சுற்றி பொதுமக்கள் கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஏராளமான பக்தர்கள் இந்த கிரிவலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இவர்கள் வஜ்ரகிரி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அச்சிறுப்பாக்கம், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக செல்கின்றனர்.

பின்னர் கடமலை புத்தூர், சீதாப்புரம், திருமுக்காடு, உத்தம நல்லூர், பள்ளி பேட்டை ஆகிய கிராமங்கள் வழியாக மழையை சுற்றி வந்து மீண்டும் அச்சிறுப்பாக்கம் அடைகின்றனர். இவ்வாறு அவர்கள் 14 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து வழிபாடு மேற்கொள்கின்றனர். நேற்று மாலை நடைபெற்ற கிரிவல நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரம பக்தர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்க வஜ்ரகிரி கிரிவல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: